எஃப்.டி.ஐ.ஐ. போராட்டம்: 10 சினிமா படைப்பாளிகள் தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புணே திரைப்பட, தொலைக்காட்சித் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி (எஃப்.டி.ஐ.ஐ.) மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக, முக்கிய சினிமா படைப்பாளிகள் 10 பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

அந்தத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது 136 நாள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, அமைதிப் போராட்டத்தைத் தொடருவதாக அறிவித்த நிலையில், சினிமா படைப்பாளிகளின் இந்தப் புதிய முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தாலும், கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில்தான், திவாகர் பானர்ஜி, ஆனந்த பட்வர்தன், பரேஷ் கம்தார், நிஷிதா ஜெயின், கீர்த்தி நக்வா, ஹர்ஷவர்தன் குல்கர்னி, ஹரி நாயர், ராகேஷ் சர்மா, இந்திரநீல் லாஹ்ரி மற்றும் லிபிகா சிங் தாராய் ஆகிய படைப்பாளிகள் தங்கள் படங்களுக்காக பல்வேறு காலங்களில் பெற்ற தேசிய விருதுகளைத் திருப்பி அளித்து, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துள்ளனர்.

சாகித்ய விருது திருப்பி அளிப்புப் போராட்டத்தைப் பின்பற்றி...

தேசிய விருதுகளைத் திருப்பி அளித்த படைப்பாளிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துரிமையையும் காத்திடுவதற்கு உறுதியேற்க வேண்டியது இந்திய அரசின் உடனடி கடமையாகும்.

தேசத்தின் உயரிய இலக்கிய விருதைத் திருப்பி அளித்த படைப்பாளிகளின் வழியை நாங்களும் பின்பற்றி, எங்களது தேசிய விருதுகளைத் திருப்பித் தருகிறோம்.

திரைப்படப் படைப்பாளிகளாக, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பின்னால் உறுதியுடன் நின்று, அவர்களின் போராட்டச் சுமையை உறுதியுடன் கைவிடாமல் இருக்க துணை நிற்கிறோம். அவர்களது சரித்திரப் போராட்டங்களை முன்னெடுக்க துணைபுரிகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை என்ன?

சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். இவர் பி.ஆர். சோப்டா தயாரித்த ‘மகாபாரதம்’ நெடுந்தொடரில் தருமபுத்திரனாக நடித்தவர் என்றாலும், திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் என்றோ நிபுணர் என்றோ பெயரெடுத்தவர் அல்ல.

இவர் மத்திய அரசை ஆளும் பாஜகவின் உறுப்பினர். சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் முறை.

இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள். அரசியல் சார்பு இருப்பது ஒரு குறையல்ல; ஆனால், அது மட்டுமே தகுதியாகிவிடக் கூடாது. இதைச் சொல்லித்தான் போராட்டம் வெடித்தது. | வாசிக்க ->'தி இந்து' தலையங்கத்தின் முழு விவரம் - கட்சி அனுதாபிகளை கட்சிக்குள்ளேயே ஆராதியுங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE