வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை; சிக்கலைத் தீர்க்க குழு அமைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க குழு அமைக்கவும் முடிவு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானவை, செல்லத்தக்கது அல்ல எனக் கூறி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு நேற்று விசாரிக்கப்பட்டபோது, கடும் அதிருப்தியை மத்திய அரசு மீது நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

வேளாண் சட்டங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றம் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதிக்கும். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய விதம் அதிருப்தி அளிக்கிறது. அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைக் கேட்டு விவாதித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி போலீஸார் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, “வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இது அரசியல் அல்ல. அரசியலுக்கும் நீதித்துறைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆதலால், விவசாயிகள் அமைப்பினர் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய இந்தச் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாங்கள் குழு அமைக்கப் போகிறோம். இந்தக் குழு அமைப்பதை எந்த சக்தியும் எங்களைத் தடுக்க முடியாது.

நாங்கள் குழு அமைத்து அந்தக் குழுவிடம் மத்திய அரசும், விவசாயிகளும் சென்று பேசினால்தான் தெளிவான முடிவு கிடைக்கும். விவசாயிகள் அந்தக் குழுவிடம் செல்லமாட்டார்கள் எனும் வாதத்தைக் கேட்கத் தயாராக இல்லை. நாங்கள் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறோம். இல்லை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என விரும்பினால் அப்படியே நடத்துங்கள்.

வேளாண் சட்டங்கள் செல்லுபடியானதா என்பது குறித்து எங்களுக்கும் கவலை இருக்கிறது. போராட்டத்தின் மக்களின் பாதுகாப்பு ஏற்படும் பாதிப்பு, அவர்களின் உடைமைகள் குறித்தும் கவலைப்பட வேண்டியுள்ளது, பாதுகாக்க வேண்டியுள்ளது.

எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறோம். ஆதலால், மறு உத்தரவு வரும்வரை இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்தச் சட்டங்களை ஆய்வு செய்யக் குழு அமைக்கிறோம்.

இந்தக் குழு நமக்கானது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பும் அனைவரும் இந்தக் குழுவினரிடம் சென்று பேசலாம். இந்தக் குழு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காது, தண்டனை வழங்காது.

அறிக்கையை மட்டுமே எங்களிடம் வழங்கும். நீதிமன்றப் பணிகளில் ஒன்றாக இந்தக் குழு இயங்கும். இந்த வேளாண் சட்டங்களை இடைக்காலத்துக்குத் தடை விதிக்கிறோம்” என உத்தரவிட்டது.

மேலும், டெல்லி போலீஸார் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


அப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய அனுமதித்தால் அவர்கள் எங்கு செல்வார்கள் என யாராலும் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, “போலீஸார் உங்களிடம்தானே இருக்கிறார்கள். ஆயுதங்கள் ஏதேனும் வைத்திருக்கிறார்களா என சோதித்து அனுப்புங்கள்” எனத் தெரிவித்தது.

அதற்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் கலந்திருப்பதாக உளவுத்துறை தகவல் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, “அப்படியா, விவசாயிகள் போராட்டத்துக்குள் தடை செய்யப்பட்ட அமைப்பினர் இருந்தால், அதை உறுதி செய்து நாளை எங்களிடம் அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்