வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தை முடித்து வீட்டுக்குச் செல்வோம் என்று மத்திய அரசிடம் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், தேச நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள் என மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரிலும், மழையிலும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே 7 கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை. 6-வது கட்டப் பேச்சுவார்த்தையின்போது விளைநிலங்களில் கழிவுகளை எரித்தல், வழக்குப் போடுவதிலிருந்து விலக்கு, மின்சாரக் கட்டண மானியம் குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 8-வது சுற்றுப் பேச்சுவார்த்தை விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் வேளாண் துறை அமைச்சகம் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசி, ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கி ஒரு மணி நேரமாகியும் இருதரப்பிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மதிய உணவைக் கூட விவசாயிகள் சாப்பிடாமல் தாங்கள் கொண்டுவந்த உணவை அப்படியை வைத்துவிட்டார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவங்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், “விவசாயிகள் தரப்பில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால்தான் மீண்டும் வீடு திரும்புவோம். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஒரு விவசாயி பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வேளாண்மை என்பது மாநில அரசுப் பட்டியலில் வருகிறது. இதில் மத்திய அரசு தலையிடக் கூடாது. ஆனால், நீங்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால், இந்த விவகாரத்தில் தீர்வு வரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். எங்களுக்குத் தெளிவான பதில் கொடுங்கள். எங்களின் நேரத்தை ஏன் வீணாக்குகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
அனைத்து இந்திய கிசான் சங்கார்ஷ் குழுவின் உறுப்பினர் கவிதா கருகான்டி பேசுகையில், “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதே” எனக் கேட்டார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரக் கூட்டம் முடிந்தபின் 3 மத்திய அமைச்சர்களும் ஆலோசனை நடத்தக் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர். அப்போது, விவசாயிகள் அனைவரும், நாங்கள் இந்தப் பிரச்சினையில் வெற்றி பெறுவோம் அல்லது செத்து மடிவோம் என்று கோஷமிட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாவிட்டால், வரும் 26-ம் தேதி நடக்கும் டிராக்டர் பேரணியைத் தீவிரப்படுத்துவோம் எனவும் மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதன்பின் வந்த மத்திய அமைச்சர்கள், “தேச நலனை மனதில் வைத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகள் நலன் நிச்சயம் காக்கப்படும்” எனத் தெரிவித்தனர். ஆனால், அதற்கு விவசாயிகள் தரப்பில் சம்மதிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago