திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்காக உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
லவ் ஜிகாத் மற்றும் திருமணத்துக்காக மதம் மாறுதல், வேலை தருவது உள்ளிட்ட சலுகைகளுக்காக மதம் மாறுதல் ஆகியவற்றைத் தடுக்க உத்தரப் பிரதேச அரசும், உத்தரகாண்ட் அரசும் சமீபத்தில் சட்டவிரோத மதமாற்றத் தடைச்சட்டத்தை அவசரச் சட்டங்களாகக் கொண்டுவந்துள்ளன. இதற்கு இரு மாநில ஆளுநர்களும் ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில் இரு சட்டங்களையும் எதிர்த்தும், அதற்குத் தடைவிதிக்கக் கோரியும், வழக்கறிஞர் விஷால் தாக்கரே, ஏஎஸ் யாதவ், ஆராய்ச்சியாளர் பிரன்வேஷ், சிட்டிஸன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் எனும் தொண்டு நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
அந்த மனுவில் மனுதாரர்கள் கூறுகையில், “உத்தரகாண்ட், உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ள திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டம் மக்களுக்கும், சமூகத்துக்கும் மிகப்பெரிய அளவில் எதிரானது. இந்தச் சட்டங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி, தவறான சக்திகளிடம் சிக்கி, தவறாகப் பயன்படுத்தக்கூடும். அவசரச் சட்டமாகக் கொண்டுவந்து, கொடுமையான அநீதிகளை இழைக்கப் போகிறார்கள். குழப்பமான சூழலையும் சமூகத்தில் ஏற்படுத்தும்.
இதற்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் வாழ்க்கைத் துணையைத் திருமணம் மற்றும் வேறுவழியில் தேர்வு செய்வது என்பது, தனிப்பட்ட நபரின் உரிமை, அடையாளம் எனத் தெரிவித்திருந்தது.
உடை, உணவு, சிந்தனைகள், சித்தாந்தங்கள், அன்பு, வாழ்க்கைத் துணை ஆகியவை ஒருவரின் அடையாளம் சார்ந்தது. ஒரு மாநில அரசோ அல்லது சட்டமோ ஒருவரின் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உத்தரவிட முடியாது. இந்த விவகாரங்களை தனிப்பட்ட நபர் சுதந்திரமாக அணுக உரிமை உண்டு. கேரளாவில் ஹதியா வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முக்கியமானது.
தன் வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தனிநபர் முடிவு எடுக்க உரிமை உண்டு, என்று கே.எஸ். புட்டுசாமி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதலால், இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரினர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சஞ்சீவ் மல்ஹோத்ரா, பிரதீப் யாதவ் ஆகியோர் ஆஜராகினர். தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சி.யு.சிங் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மனுதாரர்கள் வழக்கறிஞரிடம், “ இந்த மனுக்களை மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருக்கலாமே” எனக் கேட்டார். அதற்கு துஷார் மேத்தா, “இந்த வழக்கு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் சி.யு. சிங் கூறுகையில், “இதுபோன்ற சட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டுவிட்டதால் அதன் முக்கியத்துவம் கருதிதான் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். அடிப்படை உரிமைகள் மீறுவதாக இருப்பதால், இந்த வழக்கைத் தாக்கல் செய்தோம்.
இந்தச் சட்டம் அமலில் இருப்பதால், திருமணம் நடந்து கொண்டிருக்கும்போதுகூட, நடுவில் புகுந்து சில கும்பல் மணப்பெண் அல்லது மணமகனைத் தூக்கிச் சென்றுவிடுகின்றன. இந்தச் சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் கொடும் பிரிவு இருக்கிறது.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் கொடுமையாக இருக்கிறது. திருமணம் செய்வதற்கு கூட முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய நிலை இருக்கிறது. இது முற்றிலும் அருவருப்பாக இருக்கிறது. ஆதலால் இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “இரு மாநில அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட்டு அவசரச் சட்டத்துக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் எவ்வாறு நீதிமன்றம் தடை விதிக்க முடியும். இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது. இந்தச் சட்டங்கள் தொடர்பாக உத்தரகாண்ட், உத்தரப் பிரதேச அரசுகள் அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். 4 வாரங்களுக்குப் பின் வழக்கை மீண்டும் விசாரிக்கிறோம்” என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago