அயோத்தியில் மையம் கொண்டிருந்தராமர் கோயில் பிரச்சினை தீர்க்கப்பட்டநிலையில், தற்போது அது ஆந்திராவுக்குஇடம் பெயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள ராமதீர்த்தம் பகுதியைச் சுற்றி தற்போது அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அழகிய கோதண்டராமர் கோயில் உள்ளது. அங்குள்ள கோதண்டராமர் சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள், தலை, உடல் பாகத்தை சிறிது தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் வீசிவிட்டுச் சென்றனர். இந்த செயல்தான் தற்போதைய ஆந்திர அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கிறது.
ஒரு மதத்தினரின் நம்பிக்கையின் தலையை வெட்டி குளத்தில் வீசி சென்றவர்கள் யார்? இதன் பின்னணியில் எந்த இயக்கம் அல்லது எந்தக் கட்சி உள்ளது? என விசாரிக்க மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே ஆந்திராவில் இந்து கோயில் சிலைகள், தேர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை ஒருவரைக் கூட இது தொடர்பாக போலீஸார் கைது செய்யவில்லை. அதுவே மக்களுக்கு சந்தேகத்தை வலுப்பெறச் செய்கிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதி பகுதியில் பழங்கால தேர் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டு, இந்த விவகாரங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு கோதாவரி, கர்னூல், அனந்தபூர், கடப்பா, குண்டூர், விஜயவாடா என பல்வேறு இடங்களில் உள்ள இந்து கோயில்களின் சிலைகள் நாசம் செய்யப்பட்டு வருகிறது. கோபுரங்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுகின்றன. சில இடங்களில் ஊருக்கு வெளியே உள்ள கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளின் கை, கால்கள் உடைக்கப்படுகின்றன. நேற்று கூட காகுளம் மாவட்டம், டெக்கலியில் உள்ள புத்தர் சிலையின் வலது கை உடைக்கப்பட்டது.
ராமதீர்த்தம் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆந்திர அரசியல் ராமரை சுற்றி நகரத் தொடங்கி உள்ளது. சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநில அரசைக் கண்டித்தும் பாஜகவினர் முதலில் ராமதீர்த்ததில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் உட்பட பலர் ஜெகன் தலைமையிலான அரசை கண்டித்தனர். சந்திரபாபு நாயுடு ராமதீர்த்தம் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிடப்போவதாக அறிவித்தார். இந்தப் பிரச்சினை பூதாகரமாகி வருவதை உணர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன், “சாமி சிலைகளை நாசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஓர் அறிக்கை விட்டார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு ராமதீர்த்தம் செல்ல அமராவதியில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் வருவதற்குள், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜய்சாய் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியை பார்வையிடச் சென்றார். இத்தனை நாட்கள் வரை கண்டுகொள்ளாத அரசு தற்போது எம்.பி.யை அனுப்பி வைக்கிறதா? என்ற ஆத்திரத்தில் அவரது கார் மீது கற்களையும் காலணிகளையும் வீசி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மக்களின் கோபத்தை சந்தித்த எம்.பி, இறுதியில், ”இது எல்லாம் சந்திரபாபு நாயுடு செய்யும் சதிச்செயல்தான். அவர் ஆட்களை வைத்து இந்து கோயில் சிலைகளை உடைத்துவிட்டு பழியை ஜெகன் அரசு மீது போடுகிறார்” என்றார்.
இவர் போன பிறகு சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ராமதீர்த்தத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் "கடவுள் விவகாரத்தில் ஆடுபவனை கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். கண்டிப்பாக இதற்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்" எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இவரைத் தொடர்ந்து, மறுநாள் ராமதீர்த்தத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பவம் நடைபெற்ற குளத்தை பார்வையிட்டு, "விரைவில் குற்றவாளி யார் என்பது தெரியவரும். ஒருவேளை இது தெலுங்கு தேசத்தின் செயலாக இருந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்’’ என பேசிவிட்டு சென்றனர்.
மாநில பாஜக தலைவர் இன்று பயணம்
இன்று பாஜக மாநில தலைவர் சோம்ராஜு மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள் ராமதீர்த்தம் செல்ல உள்ளனர்.
ராமதீர்த்தம் பகுதி தற்போது அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர் வந்து செல்லும் ஒரு அரசியல் மையமாகி விட்டது. இதுவரை வடக்கே அயோத்தியில் மையம் கொண்டிருந்த ராமர் பிரச்சினை தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது தெற்கே ஆந்திராவில் மீண்டும் ராமர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. ஒரு மத நம்பிக்கையின் தலை வெட்டப்பட்டு குளத்தில் வீசப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் யார் மீதும் எடுக்கப்படவில்லை. மாறாக கோயில்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் நிர்வாகிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இனியாவது மத அரசியலை கைவிட்டு, மக்கள் பிரச்சினை குறித்து அரசியல் கட்சிகள் போராடவேண்டுமென ஆந்திராவின் கடைக்கோடி வாக்காளன் கருதுகின்றான்.
கலியுகம் முடிவுக்கு வந்து விட்டதோ..
திருப்பதியில் ’63-வது போலீஸ் மீட்’ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதியில் இருந்து காணொலி மூலம் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘இந்து கோயில்கள் மீதும், சிலைகள் மீதும் நடைபெறும் தொடர் நாச வேலைகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி சட்டப்படி தண்டிக்கப்படுவர். மக்களின் மத உணர்வை தூண்டி விடும் இதுபோன்ற செயல்களால் யாருக்கு லாபம்? கலியுகம் முடிவுக்கு வந்து விட்டதோ என தோன்றும் அளவுக்கு குற்றங்கள் அதிகரித்து விட்டன. கடவுள் என்றால் பக்தி, பயம் இல்லாத காலம் வந்து விட்டது. கடவுளை வைத்து அரசியல் செய்யும் இந்த காலகட்டமே ஒருவேளை கலியுகத்தின் கடைசி காலம் என எண்ணத் தோன்றுகிறது. தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என்றார்.
பொறுமையை சோதிக்காதீர்கள்..
தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் ஹைதராபாத்தில் நேற்று கூறும்போது, ‘‘ஆந்திராவில் தொடர்ந்து இந்து கோயில்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இந்து மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். பாஜக தொண்டர்கள் களத்தில் இறங்கினால், முதல்வர் ஜெகன், மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டுவீட்டுக்குப் போக வேண்டியதுதான். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், தெலங்கானா இடைத்தேர்தல் முடிவுகள்தான் ஆந்திராவிலும் வரும். நடைபெற உள்ள திருப்பதி மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு நாங்கள் அதிர்ச்சி அளிப்பது உறுதி. திருப்பதி மக்கள் பைபிள் வேண்டுமா ? பகவத் கீதை வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்ளட்டும்’’ என ஆவேசமாக பேசினார்.
பாகிஸ்தானில் இருக்கிறோமா..
ஆந்திராவில் இந்து கோயில்கள் உடைப்பு சம்பவம் தொடருவதை கண்டித்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கூறும்போது, ‘‘ஆந்திரா தற்போது பாகிஸ்தானாக மாறிவிட்டதா என எண்ணத் தோன்றுகிறது. ஆந்திராவில் பல இந்து கோயில்கள், சிலைகள், தேர்கள் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல பாகிஸ்தானில் நடந்து வருவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நாம் இப்போது ஆந்திராவில் காண நேர்ந்துள் ளது. நாம் ஆந்திராவில் இருக்கிறோமா? பாகிஸ்தானில் இருக்கிறோமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதிகார பலத்தால் மத மாற்றம் கூடாது..
தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவராக இருந்தாலும், அவர் தனது அதிகார பலத்தை உபயோகித்து, இந்து மக்களை அவரது மதத்திற்கு மாற்ற நினைப்பது தவறு. இந்து மக்களிடையே ஒருவித பயத்தை உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை மதமாற்றம் செய்து விடலாம் என நினைப்பது தவறு. ஆட்சியில் ஒரு மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்ற மத மாற்றத்தை ஊக்குவிப்பதோ அல்லது உருவாக்க நினைப்பதோ மிகவும் தவறு. இது மிகப்பெரிய துரோகமும் ஆகும். கோதண்டராமர் சிலையின் தலையை வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் இந்த மண்ணுக்கு மிகப்பெரிய அவமானமாகும். ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த கடந்த 18 மாதங்களில் 127 இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை ஜெகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago