கற்பனையில் வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கலாம். ஆனால், உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி விவசாயிகளிடம் கையொப்பம் பெற்றுள்ளது.
இந்தக் கையொப்பத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து முறையிட காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காலை சென்றனர்.
ஆனால், பேரணி செல்வதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்துக் கைது செய்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு கூற வேண்டும் என வலியுறுத்தினர்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகள், தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். ஆனால், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என மத்திய அரசு கூறுகிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள்.
3 பேர் மட்டும் சென்று குடியரசுத் தலைவரிடம் 2 கோடி விவசாயிகளின் கையொப்பம் அடங்கிய ஆவணத்தை அளித்தோம். இந்தச் சட்டங்களால் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள், உயிரிழந்து வருகிறார்கள். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், இந்த தேசம் பாதிப்படையும் எனத் தெரிவித்தோம்.
இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை விவசாயிகள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். எந்தவிதமான விவாதமும், ஆலோசனையும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். உங்கள் கற்பனைக்கு வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கலாம். உண்மையில் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.
ஒட்டுண்ணி முதலாளிகளுக்குத் தேவையான பணம் சேர்க்க பிரதமர் மோடி உதவி செய்து வருகிறார்.
யாரேனும் மோடிக்கு எதிராகப் பேசினால், செயல்பட்டால், அவர்களைத் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். அது விவசாயிகளாக இருந்தாலும், தொழிலாளர்களாக இருந்தாலும், மோகன் பாகவத்தாக இருந்தாலும் தீவிரவாதியாக முத்திரை குத்துவார்கள்.
இந்திய எல்லையில் இன்னும் சீன ராணுவம் இருக்கிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கி.மீ. நிலப்பரப்பை சீனா பறித்துக்கொண்டுள்ளது. இதுபற்றி பிரதமர் ஏன் பேசாமல், ஏன் மவுனம் காக்கிறார். தேசத்தை பிரதமர் மோடி பலவீனமாக்கி வருகிறார். இதை வாய்ப்பாக வெளிப்புறச் சக்திகள் பயன்படுத்துகின்றன.
நான் ஊடகங்களுக்குச் சொல்வதென்றால் இதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஊதியம் பாதிக்கப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்ன நடக்கிறது எனப் பாருங்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago