அயோத்தியில் கட்டப்படும் மசூதி ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது: முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கருத்து

By ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியில் பாபர் மசூதிக்கு இணையாக அளிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்படும் மசூதி ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

அயோத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பாபர் மசூதி-ராமர் கோயில் மீதான விவாதம் கடந்த வருடம் முடிவிற்கு வந்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நவம்பரில் தீர்ப்பளித்திருந்தது.

இதில் பிரச்சனைக்குரிய நிலம் ராமர் கோயிலுக்காக இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு டிசமர் 6, 1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு ஈடாக ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு அளிக்க உத்தரப்பிரதேச அரசிற்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, உபியின் மத்திய சன்னி மத்திய வஃக்பு வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலமும் அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் கிடைத்திருந்தது. இங்கு வேறு ஒரு மசூதி கட்ட, உ.பி. சன்னி வஃக்பு வாரியம் சார்பில் இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன்(ஐஐசிஎப்) அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வரும் குடியரசு தினத்தன்று மசூதிக்கானப் பணிகள் துவக்கப்பட உள்ளன. இதன் வரைபடமும் இரண்டு தினங்களுக்கு முன் வெலியிடப்பட்ட நிலையில் அது முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது எனக் கிளம்பியப் புகார் வலுக்கத் துவங்கி உள்ளது.

இது குறித்து இன்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித்தொடர்பாளரும் அயோத்தி வழக்கின் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருமான ஜாபர்யாப் ஜிலானி கூறும்போது, ‘வஃக்பு வாரியத்தின் சட்டத்தின்படி ஒரு மசூதியை விட்டுக்கொடுக்க முடியாது.

அதற்கு ஈடாக வேறு நிலத்தையும் மசூதி கட்ட என பெறவும் முடியாது. இது முஸ்லிம்கள் பின்பற்றும் ஷரீயத் சட்டப்படியும் தவறானது.

உ.பி.யின் மத்திய சன்னி வஃக்பு வாரியம் ஷரீயத் சட்டப்படி அமைக்கப்பட்டது. இதனால், அயோத்தியில் கட்டப்படும் மசூதியை முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்.’ எனத் தெரிவித்தார்.

இதே பிரச்சனையில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினரான எஸ்.க்யூ.ஆர்.இலியாஸ் கூறும்போது, ‘வேறு இடத்தில் மசூதி கட்ட அளிக்கும் நிலத்தை நாம் ஏற்க முடியாது எனக் கூறி விட்டோம்.

பாபர் மசூதியில் நிலப்பிரச்சனை மீதான உச்ச நீதிமன்ற வழக்கில் நாம் தோல்வி அடைந்து விட்டதால் எங்களுக்கு நிலம் தேவையில்லை. மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் உபி சன்னி வஃக்பு வாரியம் செயல்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அயோத்தியில் மசூதி கட்டும் ஐஐசிஎப் அறக்கட்டளையின் கூறும்போது, ‘முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் மட்டுமே ஷரீயத் சட்டத்தை தெளிவுபடுத்தும் முழு உரிமையை பெறவில்லை.

அவரவர் பெற்றுள்ள தெளிவிற்கு ஏற்ற வகையில் ஷரீயத் சட்டம் புரிதலுக்கு உள்ளாகி விட்டது. தொழுகை நடத்தும் இடமான மசூதியை நாம் கட்டுவதில் எந்த தவறும் இல்லை.’ எனக் குறிப்பிட்டார்.

அயோத்தியின் புதிய மசூதிக்கு பாபரின் பெயரையும் வைக்க மறுத்த சன்னி வஃக்பு வாரியத்தினர், அதற்கு தனிப்பூர் மசூதி’ எனப் பொதுவானப் பெயரிட்டுள்ளனர். இதன் வளாகத்தில் 300 படுக்கைகள் கொண்ட உயர்தர சிகிச்சைக்கான இலவச மருத்துவமனை, உயர்கல்விக்கான ஆய்வு மையம், நூலகம், அருங்காட்சியகம், சமுதாய உணவுக்கூடமும் மசூதியுடன் கட்டப்பட உள்ளன.

இதனால், அனைத்து மதங்களுக்கான மதநல்லிணக்கச் சின்னமாக கட்டப்படும் இந்த மசூதியின் வளாகம், ராமபக்தர்கள் வந்து செல்லும் இடமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.-23-12-2020

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE