வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் நிலையாக இருக்கிறது. 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
இந்த மகளிர் வழக்கறிஞர் கூட்டமைப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், மகாலட்சுமி பவானி, பிஸ்வாஜித் பட்டாச்சார்யா, மோகன் கடார்கி, ஆனந்த் குரோவர், சதான் பராஸ்யத், பிரசாந்த் பத்மநாபன், ரிது திவாண், ஸ்வேதா கபூர், ஜெபா கையர், இராம் மஜித் உள்ளிட்டோர் உள்ளனர்.
இதுகுறித்து மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''வேளாண்மை மாநிலப் பட்டியலில் இருப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டங்களை நிறைவேற்றியது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்தச் சூழலில் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவது இந்த மனுக்களைப் பயனற்றதாக மாற்றி, இந்திய வேளாண் துறைக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
குறைந்தபட்ச ஆதார விலையைக் குலைக்கும் முடிவுக்கு எதிராகவும், சிறு விவசாயிகளுடன் பேரம்பேச கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதியளித்ததையும் எதிர்க்கிறோம். இந்த முடிவுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபமாக அமையும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறும். இதனால் உள்நாட்டின் தேவைக்காக விவசாய உற்பத்தி நடைபெறாமல் சர்வதேச அளவில் தேவையையொட்டி வேளாண்மை நடக்கும்.
உலகப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரம் குறிப்பாக நகர்ப்புற வேலைவாய்ப்பு கரோனாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால், பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மீது அரசியலமைப்புக்கு விரோதமாகச் சட்டங்களைப் புகுத்துவது வேதனையாக இருக்கிறது.
நம்முடைய தேசத் தந்தை மகாத்மா காந்தி வாக்கின்படி, ஒரு அநீதியை மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைச் செய்வதற்கு இணையானதாகும். ஆதலால், நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அநீதியான வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தார்மீக ரீதியில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறோம்''.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago