இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடத் தொடங்கியவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுப்பது தொடங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். கடந்த இரு நாட்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. ஆகியோர் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைந்தனர். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியைப் பிடிப்பதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மாறி ஒருவர் அனல் பறக்கும் வார்த்தைகளால் அறிக்கை விட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவிலிருந்து டெல்லி புறப்படும் முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும் மத்திய உள்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
» கோவிட்-19 தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை; ஆனால் அவசியமானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி
அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் தலைமைச் செயலாளருக்கும், காவல் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஜராகக் கூற உரிமை இருக்கிறது. நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, முதலில் திரிணமூல் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துவிட்டு, அதன்பின் மத்திய அரசிடமும், மக்களிடமும் பேச வேண்டும்.
பாஜக தலைவரின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டதை பாஜக கண்டித்துள்ளது. நானும் கண்டித்துள்ளேன். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது என பாஜக நம்புகிறது. அனைத்துக் கட்சிகளின் குரல்களையும் கேட்க வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். பாஜக தலைவர் வாகனத்தின் மீதான தாக்குதல் அவர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதற்கு முழுமையாக திரிணமூல் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
வெளியில் இருந்து வந்தவர்கள், மண்ணின் மைந்தர்கள் என மம்தா பானர்ஜி பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “மண்ணின் மைந்தர்கள், வெளியாட்கள் எனப் பேசுவது, அரசின் தோல்வியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பத்தான். தேர்தலில் பாஜக வெல்லட்டும். இந்த மண்ணின் மைந்தர்கள் ஆட்சி செய்வார்கள்.
சில விஷயங்களை மம்தா மறந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் மம்தா இருந்தபோது, இந்திரா காந்தி, பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ் ஆகியோர் மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, அவரை வெளியாட்கள் என மம்தா அழைத்திருக்கிறாரா? இந்த தேசத்தில் இருப்போர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்லக்கூடாது என மம்தா விரும்புகிறாரா? வங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர், மம்தாவை வீழ்த்துவார், அடுத்த முதல்வராக வருவார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் திரிணமூல் காங்கிரஸ், பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கத் தயாராக இல்லை. மேற்கு வங்கத்தில் 23 லட்சம் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பிரதமர் கிசான் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காமல் மம்தா தடுக்கிறார். இன்னும் விவசாயிகள் பட்டியலைக் கூட மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா அனுப்பவில்லை.
தேசம் சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு மேற்கு வங்கத்தின் பங்களிப்பு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சியிலும், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியிலும் பங்களிப்பு மிகவும் குறைந்துவிட்டது. கடந்த 1960களில் மேற்கு வங்கத்தின் தனிநபர் வருமானம் மகாராஷ்டிராவைவிட இரு மடங்கு இருந்தது. ஆனால், இன்று பாதியளவுகூட இல்லை. இதற்கு யார் பொறுப்பு” எனக் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடத் தொடங்கியவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும். கரோனா வைரஸ், பரவல் காரணமாக இதுவரை விதிமுறைகள் வகுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago