மாணவர்களை எதிரிகள் போன்று நடத்துகிறீர்கள்; மாணவர்களுக்கு எதிரான மனநிலையில் சிபிஎஸ்இ இருக்கிறது: டெல்லி உயர் நீதிமன்றம் சாடல்

By பிடிஐ


மாணவர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியம் எதிரிபோன்று நடத்துகிறது, அவர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்து அவர்களை குறிப்பிட்ட சில விஷயங்களில் உச்ச நீதிமன்றத்துக்கு அலைய வைக்கிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக விளாசியுள்ளது.

சிபிஎஸ்இயில் 12-ம் வகுப்பு படித்த சன்யம் குப்தா எனும் மாணவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்வில் 95.25 சதவீதம் மதிப்பெண் பெற்றார். ஆனால், இம்ரூவ்மென்ட் தேர்வு எழுத விரும்பிய குப்தா, ஓர் ஆண்டு மீண்டும் கணக்குப்பதிவியல், ஆங்கிலம், பொருளாதாரம், பிசினஸ் ஸடடீஸ் ஆகிய தேர்வுகளை எழுத விரும்பினார்.

இதில் பிசினஸ் ஸ்டடீஸ் தேர்வைத் தவிர அனைத்துத் தேர்வுகளும் திட்டமிடப்பட்ட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தன. மார்ச் 24-ம் தேதி நடக்க இருந்த பிசினஸ் ஸ்டடீஸ் தேர்வு மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, இம்ரூவ்மென்ட் தேர்வு எழுதிய பாடங்கள், ரத்து செய்யப்பட்ட பிசினஸ் ஸ்டடீஸ் தேர்வு, ஆகியவற்றின் முடிவுகளை வழக்கமான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிப்பதைப் போல் கருதி வெளியிட வேண்டும். அதேபோன்று மறுமதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் குறிப்பிட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அந்த மாணவருக்கு மதிப்பெண் பட்டியலை திருத்தித் தரக்கோரி சிபிஎஸ்இக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதும் மாணவர்களும், வழக்கமான தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் பட்டியலை பெறலாம் என உத்தரவிட்டார்.

சிபிஎஸ்இ வாரியத்தின் மறுமதிப்பீடு திட்டம், கரோனாவில் தேர்வு ரத்தானதால் எழுத முடியாமல் போன இம்ப்ரூவ்மென்ட் மாணவர்களுக்கும் பொருந்தும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கரோனா காலத்தில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதமுடியாமல் போன மாணவர்களுக்கும், மறுமதிப்பீடுதிட்டம் பொருந்தும் எனத் தெரிவித்தது.

இந்த திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை குப்தாவுக்கு வழங்கியநிலையில் அவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அளித்த முடிவை எதிர்த்து சிபிஎஸ்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையாடு செய்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ வாரியத்தின் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒருநீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளதை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

நீதிபதிகள் கூறுகையில் “ மாணவர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் சிபிஎஸ்இ மனநிலையை நாங்கள் விரும்பவில்லை. மாணவர்களை நிம்மதியாக இருக்கவிடாமல் உச்ச நீதிமன்றத்துக்கு இழுக்கிறீர்கள். மாணவர்கள் படிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா அல்லது நீதிமன்றத்துக்கு அலைய வேண்டும் என நினைக்கிறீர்களா.

மாணவர்களை எதிரிகள் போன்று சிபிஎஸ்இ நடத்துகிறது. மறுமதிப்பீடு திட்டம் இம்ப்ரூமென்ட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தினால் என்ன கெட்டுவிடப் போகிறது. யாருக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு எந்த அவசரமும் ஏற்படவில்லையே.

நீதிமன்றத்தின் உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது, அந்த மாணவரும் மேல்படிப்பு படித்து வருகிறார். ஏன் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும். உங்களுக்குத் தேவைப்பட்டால் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடுங்கள். மாணவர்களை ஏன் நீதிமன்றத்துக்கு இழுக்கிறீர்கள். இந்த வழக்கில் அந்த மாணவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்ப முடியாது ” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE