பாஜக பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை; அதனால் நாடகமாடுகிறார்கள்: ஜே.பி.நட்டா கார் மீதான தாக்குதல் குறித்து மம்தா பானர்ஜி கிண்டல்

By பிடிஐ

ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது கற்களை வீசித் தாக்கினார்கள் என பாஜக நாடகமாடுகிறது. பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் திசை திருப்புகிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சென்றுள்ளார். கொல்கத்தாவிலிருந்து தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நகருக்கு ஜே.பி.நட்டா இன்று சென்றபோது, அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது சிராகோல் எனும் இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள் என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் பானர்ஜி பேசியதாவது:

''பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது என பாஜகவினர் கூறுவது நாடகம். அவர்கள் நடத்திய பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் அதை திசைதிருப்பவே நாடகமாடுகிறார்கள்.

நட்டாவின் வாகனத்தைத் தொடர்ந்து ஏன் 50 வாகனங்கள் சென்றன. அவரின் பாதுகாப்பு வாகனத்துக்குப் பின் 3 வாகனங்கள்தான் செல்லும். நட்டா பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசப்பட்ட சிராகோல் பகுதியில் தேநீர்க் கடையில் யாரேனும் சண்டைபோட்டிருப்பார்கள், அதைப் பார்த்து போலீஸார் விசாரித்திருப்பார்கள்.

ஆனால், நட்டாவுக்குப் பாதுகாப்பாக 50 கார்கள், அதைத் தொடர்ந்து ஊடகப் பிரிவினரின் 30 வாகனங்கள், 40 மோட்டார் பைக்குகள் சென்றன. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்களில் கடைசி வாகனத்தில் கல்லெறியப்பட்டுள்ளது. இது என்ன திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

நான் கேட்கிறேன். நட்டாவின் பாதுகாப்பு வாகனம் எவ்வாறு தாக்கப்படக்கூடும். நட்டாவுக்குத்தான் மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப் படைகள் பாதுகாப்புக்கு இருக்கின்றன.

மத்திய படைகளை சார்ந்து நட்டா இருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் பலருக்கும் மாநில அரசுக்கே தெரியாமல் மத்திய படை பாதுகாப்பு அளிக்கிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. ஆனால், தொடர்ந்து அதில் மத்திய அரசு தலையிடுகிறது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்க்கிறதா? ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தொடர்ந்து மாநில அரசைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

எப்போதெல்லாம் நான் டெல்லிக்குச் செல்கிறோனோ அப்போது என்னுடைய வீட்டு வாசல் முன் பாஜகவினர் நின்று போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மரியாதையை நீங்கள் எதிர்பார்த்தால், முதலில் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE