மகாத்மா காந்தியைக் கொன்றவர்களிடம் ஒருபோதும் மேற்கு வங்கம் தலைவணங்காது: மம்தா பானர்ஜி காட்டம்

By பிடிஐ

மேற்கு வங்கம் என்பது அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையுடன் நீண்டகாலம் வாழும் வரலாற்றைக் கொண்டது. ஒருபோதும் மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்களிடம் மேற்கு வங்கம் தலைவணங்காது என்று முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இது தவிர காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில் மேற்கு மிட்னாப்பூரில் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது.

இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் மீது பாகுபாடு காட்டியும், அராஜகத்தோடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு நடந்து கொள்கிறது. மக்களுக்கு விரோதமான இந்தச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும்.

பாஜகவின் தவறான ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அல்லது மவுனமாக இருப்பதையும் விட, சிறையில் இருப்பதே சிறந்தது. வங்காளிகள், வங்காளிகள் இல்லாத மக்கள் எனப் பிரித்துப் பார்த்து அரசியல் செய்வதை நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

அனைவருமே எங்களுக்குச் சகோதர சகோதரிகள்தான். அதேபோல இந்து, முஸ்லிம் என பிரித்துப் பார்க்கும் அரசியலிலும் நம்பிக்கை இல்லை. ஆனால், பாஜக அரசியல் லாபத்துக்காகப் பிரித்தாளும் அரசியல் செய்கிறது.

அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் என்ற வரலாற்றை மேற்கு வங்கம் கொண்டது. ஆதலால், மகாத்மா காந்தியைக் கொன்றவர்களிடம் ஒருபோதும் இந்த மாநிலத்தின் மக்கள் தலைவணங்க மாட்டார்கள்.

மேற்கு வங்கத்தை ஒருபோதும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க மாட்டேன். இந்த மாநிலத்தின் மக்கள் ஏதாவது முயற்சி எடுத்து இதைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வெளியிலிருந்து நம் மாநிலத்துக்குள் வரும் சிலரால், நீங்கள் மிரட்டப்படுவீர்கள். இதற்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து அவர்களை எதிர்க்க வேண்டும். நாம் அமைதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

இவர்கள் இங்கு சுதந்திரமாக தங்கள் காரியங்களைச் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

விவசாயிகளின் உரிமைகளைத் தியாகம் செய்தபின், ஒருபோதும் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிகாரத்தில் நீடித்திருக்கக் கூடாது. என்னுடைய அரசுக்கும், நலத்திட்டங்களுக்கும் பாஜக அரசு அவப்பெயர் ஏற்படுத்த முயல்கிறது.

எந்த வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் செய்தாலும் அதில் அவப்பெயர் ஏற்படுத்த பாஜக எப்போதும் முயல்கிறது. ஆனால், ரஃபேல் போர் விமான ஊழல் என்ன ஆனது, பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது, பிஎம் கேர்ஸ் நிதி குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை மிரட்டும் பாஜக, சிறையில் தள்ளுகிறது. நான் சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை. பாஜகவின் தவறான ஆட்சியைச் சமரசம் செய்து கொள்வதைவிட சிறைக்குச் செல்வதே சிறந்தது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE