ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்துக்கு கோல்வால்கர் பெயர்: மத்திய அரசுக்கு அறிவியல் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, கேஎஸ்எஸ்பி எதிர்ப்பு

By பிடிஐ

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தின் பெயரை மாற்றி அதற்கு ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் எம்எஸ் கோல்வால்கர் பெயரைச் சூட்ட முடிவு செய்த மத்திய அரசுக்கு அனைத்து இந்திய மக்கள் அறிவியல் அமைப்பு (ஏஐபிஎஸ்என்), கேரளா சாஸ்த்ரா சாஹித்யா பரிஷத் (கேஎஸ்எஸ்பி) ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் முடிவுக்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இப்போது இரு முற்போக்கு அறிவுஜீவி அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு கட்டிடத்தின் பெயரை, ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வால்கர் புற்றுநோய் மற்றும் வைரஸ்தொற்று தடுப்பு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தின் பெயர் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தனுக்குக் கடிதம் எழுதினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வெளியிட்ட கருத்தில், “ராஜீவ் காந்தி மையத்தின் பெயரை மாற்றி கோல்வால்கர் பெயரை மாற்றும் மத்திய அரசு, கேரள மாநிலத்துக்கும், தேசத்துக்கும் கோல்வால்கர் பங்களிப்பு என்ன என்பதை மக்களுக்குக் கூற வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்திய அரசின் முடிவைச் சாடியிருந்தார்.

இந்நிலையில், முற்போக்கு அறிவுஜீவி அமைப்புகளான அனைத்து இந்திய மக்கள் அறிவியல் அமைப்பு, கேரளா சாஸ்த்ரா சாஹித்யா பரிஷத் ஆகியவையும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

அனைத்து இந்திய மக்கள் அறிவியல் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில், “நவீன அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பெயரை, நவீன தொழில்நுட்பத்தை எதிர்க்கும், மேற்கத்தியத் தொழில்நுட்பம் என்று சொல்லும் ஒருவரின் பெயரைச் சூட்டுவது கண்டிக்கத்தக்கது.

மகாபாரதத்தில் 100 கவுரவர்கள் ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தில் பிறந்தார்கள். கர்ணன் வெளிப்புறச் சக்தியால் பிறந்தவர் என்று கோல்வால்கரின் சந்ததிகள் இன்னும் நம்புகிறார்கள். இந்த அறிவியல் மையம், போலி அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையமாக மாறிவிடக்கூடாது.

ஒருவேளை பெயரை மாற்ற விரும்பினால், உயிரி தொழில்நுட்பத்தில் பங்களிப்புச் செய்த ஏராளமான சிறந்த இந்திய விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சூட்டலாம்.

கேரள அரசின் கருத்துகளுக்கு மத்திய அரசு மரியாதை அளிக்க வேண்டும். மக்களின் கருத்துகளுக்கும், எதிர்க்கட்சியின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கேரளா சாஸ்த்ரா சாஹித்யா பரிஷத் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்ஜிஎஸ்பி மையத்தின் பெயரை மாற்றி ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் கோல்வால்கர் பெயரைச் சூட்டும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மத்திய அரசின் முடிவு அறிவியல் விஞ்ஞானிகளுக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் அல்ல, தனிமனிதர்களின் மாண்பு மீது நம்பிக்கை வைத்துள்ள, மனிதநேயத்தைப் பரந்த நோக்கத்தில் அணுகக்கூடிய அனைத்து மனிதர்களுக்கும் விடுக்கும் சவால். உலக அளவில் இருக்கும் அறிவியல் சமூகத்தினரை அவமதிக்கும் செயலாகப் பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்