தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும்; ஆன்மிக அரசியலை ரஜினி உண்மையாக செய்வார்: பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து உங்கள் கருத்து என்ன?

அவரது கட்சி எப்படி பணியாற்றுகிறது என்பதை பொறுத்தே வெற்றி கிடைக்கும். அவர் ஊழலை எதிர்த்து பேசியிருப்பதால் யாருடன் கூட்டணி வைப்பது என்ற கேள்வி எழும். அனைத்தையும் மாற்றுவோம் எனக் கூறிய அவர் பாஜக- அதிமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படும். இவரது வரவால் அதிமுகவில் போட்டியிடும் வாய்ப்பு இழப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள்.

ரஜினியை முதல்வர் வேட்பாளராக்கி அவருடன் பாஜக கூட்டணி வைக்குமா அல்லது அதிமுகவுடன் கூட்டணி தொடருமா?

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதால் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எனது கருத்து. தமிழகத்தில் பாஜக தலைமைக்கு வருபவர்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற ஒரு கலாச்சாரத்தை 20 வருடங்களாக உருவாக்கி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட்டு நாங்கள் 2-ம் இடத்துக்கு வந்துள்ளோம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் 2-ம் இடம் வந்துள்ளோம்.

தேர்தலுக்கு முன் விடுதலையாகும் சசிகலாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

மிகவும் திறமை வாய்ந்தவரான சசிகலாவுக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு. டெல்லியில் அமித் ஷா, பாஜகவை நடத்துவதை போல், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா தான் அதிமுகவை நடத்தினார். ஜெயலலிதாவின் அனுதாப வாக்குகள் சசிகலாவுக்கே கிடைக்கும். தேவர் சமுதாயத்திலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால் இவற்றை சாதகமாக்கி அதிமுகவை தனக்கானதாக மீண்டும் மாற்ற சசிகலா நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

சசிகலா மீது ஊழல் வழக்கு தொடுத்த நீங்கள் இப்போது அவருக்கு ஆதரவாகப் பேசுவது ஏன்?

சசிகலா தனது தவறுக்கான தண்டனையை அனுபவித்துவிட்டார். எதிர்காலத்தில் சசிகலாவின் நடவடிக்கையை பொறுத்து அவருக்கு எனது ஆதரவு இருக்கும்.

ரஜினியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியுமா?

திமுகவில் ஊறிப்போயிருந்த தொண்டர்களை தன்னுடன் அழைத்து வந்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். ஆனால், ரஜினிக்கு எந்தக் கட்சியில் இருந்து தொண்டர்கள் கிடைப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், ஆன்மிக அரசியல் பேசும் ரஜினி அதை விட்டு விடாமல், கருப்பு சட்டை அணியாமல் செய்தால் அவருக்கு எம்ஜிஆரை போல் வெற்றி கிடைக்கும்.

ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறுவதில் உங்கள் புரிதல் என்ன?

தர்மம், நியாயம், உண்மை, நீதி என ஆட்சி நிர்வாகத்தில் உள்ள பலதும் ஆன்மிகத்தில் உள்ளது. ஆனால் இந்த வகை அரசியலில் ஒரு குறிப்பிட்ட மதக்கடவுளின் ஆன்மிகத்தை கடைப்பிடிக்கக் கூடாது. தயானந்த சரஸ்வதியை பின்பற்றுபவரான ரஜினி, ஆன்மிக அரசியலை அருமையாகச் செய்வார். இதில் அவர் திரைப்படம் போல் நடிக்காமல் உண்மையாகச் செய்வார்.

திமுக கூட்டணியை உடைக்க பாஜக முயல்வதாகவும், அதற்கு ரஜினி துணை போவார் எனவும் கூறப்படுகிறதே?

இதை பாஜக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைத்து, வாஜ்பாய் தலைமையிலான பாஜக தவறு செய்தது. இதனால் தான் ராமர் சேது பாலத்தை உடைக்கும் முயற்சி நடந்தது. பாஜகவின் சித்தாந்தப்படி இனி திமுகவுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்