ஆதார் அட்டைக்காக ஒருவர் தானே முன் வந்து தனது சொந்த, அந்தரங்க, தனியுரிமை விவரங்களை, தகவல்களை அளிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.
அதேவேளையில், இது குறித்த ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எனவே, ரேஷன் பொருட்கள், சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மட்டும் ஆதார் அட்டையை வைத்துக் கொள்ளலாம்; மற்ற அனைத்து திட்டங்களுக்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்ற முந்தைய இடைக்கால உத்தரவு நீடிக்கிறது.
இந்த விவகாரத்தில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், மற்றும் எஸ்.ஏ. போப்தே ஆகியோருக்கும் அட்டார்னி ஜெனரல் முகுல் ரஹோட்கிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து விசாரணை இன்று (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆதார் அட்டை வழக்கில் தனியுரிமை, அந்தரங்க தகவல்களை ஒருவர் தானாகவே முன் வந்து அளிக்கும் விவகார்த்தை விசாரிக்க அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
ஆதார் வழக்கின் பின்னணி:
பொது மக்களின் அரசு சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் உள்ள சிக்கல்களை மையப்படுத்தி கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி 2012-ல் ஆதார் அட்டை கட்டாயமா என்று கேள்வி எழுப்பி மனு செய்திருந்தார். அதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கு முடிவடையும் வரை ஆதார் அட்டை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, ரேஷன் பொருட்கள், சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மட்டும் ஆதார் அட்டையை வைத்துக் கொள்ளலாம் என்று மற்ற திட்டங்களுக்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கேட்டுக் கொள்ளும் போது மட்டுமே சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், செபி, டிராய், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை அரசு சார்ந்த சமூகநலத்திட்டங்கள் தேவைப்படும் மக்கள் திரளுக்கு சென்றடைவதில் உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு பெரும் தடையாக உள்ளது, எனவே ஆதார் அட்டைத் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று செலமேஸ்வர், பாப்தே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.
இதில், ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த, தனியுரிமை அல்லது அந்தரங்கத் தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டின் ஏழை மக்களும் வறியோர்களும் தயாராக உள்ளனர், இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும் எனவே ஆதார் அட்டைத் திட்டத்தின் வழியில் நிற்க வேண்டாம் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்தக் கோணத்தின் அடிப்படையை உச்ச நீதிமன்ற நீதிபதி சலமேஸ்வர் கேள்வுக்குட்படுத்தும் போது, “ஏழை மற்றும் வறியோர் என்பதற்காக அவர் தனியுரிமைக் கொள்கையை வைத்துக் கொள்ளக் கூடாதா” என்றார்.
அட்டார்னி ஜெனரல் முகுல் ரஹோட்கி ஆதார் அட்டையை அனைவரும் விருப்பப்பட்டே எடுத்துக் கொள்கின்றனர். குடிமக்கள் நன்கு அறிந்தே இதற்கான தெரிவை மேற்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு அமர்வின் மற்றொரு நீதிபதி எஸ்.ஏ.போப்தே பதிலளிக்கும் போது, “நன்கு அறிந்தே நான் இந்தத் தெரிவை மேற்கொண்டேன் என்பது பற்றி நான் நன்கு அறியவில்லை. அதாவது நான் அளிக்கும் தகவல்களைக் கொண்டு என்ன செய்யப்படும் என்பதைப் பற்றிய முழு விவரம் என்னிடம் இல்லை. நீங்கள் அதனை எனது சொந்த விவகாரங்களில் தலையீடு செய்வதற்காகவோ, கண்காணிப்பதற்காகவோ பயன்படுத்த முடியும்” என்றார்.
இதற்கு ரஹோட்கி பதிலளிக்கையில், “100 கோடி மக்களுக்காக நீங்கள் பேச முடியுமா? ஆதார் பயன்படுத்துவது ஒருவருக்கு பிரச்சினையாக இருந்தால் பயன்படுத்தாமல் இருந்துவிட்டுப் போகட்டும். தினக்கூலியில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளவர்கள், உண்ண உணவு இல்லாதவர்களுக்கு ஆதார் ஒரு பிழையற்ற வழிமுறை. ஆனால் இங்கு நீங்களோ சிலரது தனியுரிமை, அந்தரங்க உரிமைகள் பற்றிய அச்சங்களை பேசுகிறீர்கள். நீங்கள் நாட்டுக்காகப் பேசவில்லை” என்றார்.
அட்டார்னி ஜெனரல் ரொஹாட்கிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, “நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் சென்றடைவதை உச்ச நீதிமன்றம் ஏன் தடுக்க வேண்டும்? ஒரு ஏழை, 'எனது தனியுரிமையை எடுத்துக் கொள்ளுங்கள் பணம் கொடுங்கள்' என்று கேட்கும் போது, உச்ச நீதிமன்றமோ பணம் வேண்டாம் தனியுரிமையை வைத்துக் கொள் என்று கூறுகிறது” என்றார்.
ஆனால், ஆதாரை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும் போது, “பயோமெட்ரிக்ஸ், என்னுடைய கருவிழி, என்னுடைய விரல் ரேகைப்பதிவுகள் என்னுடைய அந்தரங்கமான சொந்த சொத்து. பயோமெட்ரிக்தான் நான். முன்னாள் எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. க்கள் இதில் உள்ளபோது, கார்ப்பரேட்கள் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து தனித்துவ சொந்தத் தரவு அறுவடைச் செய்கின்றனர். இந்தத் தரவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அரசுக்கு எவ்வித அறிதலும் இல்லை. சட்ட ரீதியான அனுமதியோ, நிர்வாக அதிகாரமோ எதுவும் இல்லாமல் இத்தகைய முக்கிய தரவுகள் திரட்டப்படுகின்றன” என்றார்.
இதனையடுத்தே விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் ஆதார் அட்டைக்காக ஒருவர் தானே முன்வந்து தனது அந்தரங்க உரிமைகளை, தகவல்களை அளிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago