கிராமங்கள், சிறிய நகரங்களில் வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் இருந்து உத்வேகம் பெற்று பலமான, தற்சார்பான, பங்கேற்புடன் கூடிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்துல் கலாமை போல வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து, இந்திய மக்களில் பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் பல்வேறு பொருளாதார, சமூக சவால்களுக்குத் தீர்வு காண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

டாக்டர் சிவதாணு பிள்ளை எழுதிய ``அப்துல் கலாமுடன் 40 ஆண்டு காலம் - சொல்லப்படாத தகவல்கள்'' (40 Years with Abdul Kalam-- Untold Stories) என்ற புத்தகத்தைக் காணொலி மூலம் வெளியிட்டுப் பேசிய திரு. நாயுடு, டாக்டர் கலாம் வாழ்க்கை குறித்த நேரடி தகவல்களை அளிப்பதாக அந்தப் புத்தகம் உள்ளது என்று கூறினார். ``சிரமங்களையும், பின்னடைவுகளையும் சரியான உத்வேகத்துடன் எடுத்துக் கொண்டால், மனப்போக்கையும், குணத்தையும் மாற்றக்கூடிய அம்சங்களாக எப்படி அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்ற வலுவான தகவலை டாக்டர் கலாம் அளித்துள்ளார்'' என்று அவர் கூறினார்.

முன்னாள் குடியரசு தலைவருடன் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை நினைவுகூர்ந்த திரு. நாயுடு, ``டி.ஆர்.டி.ஓ.வில் பணியாற்றிய போதும், பிறகு குடியரசுத் தலைவராக இருந்தபோதும், அவருடன் நான் கலந்தாடல் செய்ய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறையும் அவருடைய ஆழமான அறிவும். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றுவதில் உள்ள ஆர்வமும் என்னை வியக்க வைத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

டாக்டர் கலாம் உண்மையான கர்மயோகியாக, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் ஏற்படுத்துபவராக இருந்தார் என்று அவர் கூறினார். அப்துல் கலாம் உண்மையான `மக்களுக்கான குடியரசுத் தலைவராக' இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குப் பிரியமானவராக அவர் இருந்தார். ``எளிமை, நேர்மை, மதிநுட்பத்தின் அடையாளமாக அவர் இருந்தார். இந்தியாவின் பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் திறன்களை பலப்படுத்துவதில் அவருடைய பங்களிப்புகள் மதிப்பிட முடியாதவை'' என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

டாக்டர் கலாம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரந்த மனம் மற்றும் கண்ணியத்துக்கு உரியவராக இருந்தார். நட்பு மற்றும் அறிவை ஊக்கப்படுத்துபவராக அவர் கருதப்பட்டார். முன்னாள் குடியரசு தலைவரின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட உயிரிக்கு டாக்டர் கலாம் பெயரை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வைத்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

இந்தியா குறித்த டாக்டர் கலாமின் தொலைநோக்குப் பார்வை பற்றிக் குறிப்பிட்ட நாயுடு, ``ஏராளமான இயற்கை வளங்களும், பல்வேறு துறைகளில் திறமைசாலிகளும் உள்ள நிலையில், வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டிய அவசியம் பற்றி எப்போதும் அவர் பேசுவார். விரைவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா வளரும் திறன் கொண்டிருக்கிறது என்பதில் அவர் திருப்தி கொண்டிருந்தார்'' என்று நாயுடு தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டமைக்கு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு செயல்படுவதற்கு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் டாக்டர் கலாமின் பெரிய விருப்பமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். ``அவர் தீவிர தேசப் பற்றாளராக, உத்வேகத்தை ஏற்படுத்தும் பேச்சாளராக, வளமான எழுத்தாளராக இருந்தார். பலருடைய வாழ்க்கையைத் தொடும் வகையில் கலாமின் ஆளுமை தான், அன்புக்குரிய தலைவராக அவரை உருவாக்கியது'' என்று நாயுடு கூறினார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிக் குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ``பரவலாக்கப்பட்ட அடிப்படையில் திட்டமிடுதல், உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை வளர்ப்பது, குடிசைத் தொழில்களை பெருமளவில் ஊக்குவிப்பதன் மூலம், நமது கிராமங்களும் நகரங்களும் வளர்ச்சி மையங்களாக உருவெடுக்கும்'' என்று அவர் கூறினார்.

உள்ளூர் வளர்ச்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியத்துவம் கொடுத்தால் இது சாத்தியமாகும் என்றார் அவர். PURA மாடல் மூலம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு டாக்டர் கலாம் ஆர்வத்துடன் முயற்சிகள் எடுத்தார் என்றும், எல்லோருக்கும் அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய மக்கள் தொகையின் சராசரி வயது 30க்கும் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலக அளவில் இளைஞர்கள் மிகுந்த நாடாக இந்தியாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த இளைஞர் சக்தியை, தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். எல்லா தலைவர்களுக்கும் இதுதான் செயல் திட்டமாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். அதற்காகத்தான் நாடு முழுக்க தாம் பயணம் சென்று இளைஞர்களைச் சந்தித்து, உத்வேகம் அளிப்பதாகவும், இளைஞர்களிடம் இருந்து புதிய சிந்தனைகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பெருந்தொற்று பாதிப்பு சூழலில் அறிவியல் அறிஞர்களின் பல புதுமை சிந்தனை படைப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், தனிப்பட்ட உடல் பாதுகாப்பு உடை (பி.பி.இ.) உற்பத்தியே இல்லாத நிலையில் இருந்து, இப்போது உலக அளவில் இதை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியாவை தற்சார்பு கொண்டதாக உருவாக்குவதற்கு தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் கலாமின் `தற்சார்பு இந்தியா' என்ற கனவை உண்மையில் நனவாக்குவதற்கு, இதுபோன்ற வெற்றிகளை மற்ற துறைகளிலும் உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஷில்லாங் ஐ.ஐ.எம். நிகழ்ச்சியில், டாக்டர் கலாம் சுற்றுச்சூழல் குறித்து ஆற்றிய கடைசி உரையை நாம் நினைவுகூர வேண்டும் என்று அவர் கூறினார். சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழும் வகையிலான ஒரே கிரகமாக பூமி மட்டுமே உள்ளது என்றும், நம் எதிர்கால தலைமுறையினருக்கும் வாழ்வதற்கு உகந்த பூமியை விட்டுச் செல்லும் வகையில் அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்றும் டாக்டர் கலாம் திரும்பத் திரும்பக் கூறி வந்தார். வளர்ச்சி என்ற பார்வையில் இயற்கைக்கு நாம் அதிக ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கலாம் எச்சரிக்கை விடுத்து வந்தார் என்று நாயுடு தெரிவித்தார்.

டாக்டர் கலாமின் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டிய தருணமாக இது உள்ளது என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான வளர்ச்சிப் பாதையை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். ``எரிசக்தி தேவை குறைவாக உள்ள, தூய்மையான மற்றும் சிக்கனமான தொழில்நுட்பத் தீர்வுகளை நமது விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் புதிதாக உருவாக்க வேண்டும்'' என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விரிவான ஒரு புத்தகத்தை எழுதியமைக்காக டாக்டர் பிள்ளையின் முயற்சிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். டாக்டர் கலாம் உடன் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து இன்னும் நிறைய பேர் எழுதுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதன் மூலம், நாட்டுக்காக அவர் எந்த வகையில் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு கூறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை, இஸ்ரோ பேராசிரியர் டாக்டர் ஒய்.எஸ். ராஜன், பென்டகன் பிரஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. ராஜன் ஆர்யா உள்ளிட்டோர் இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்