மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடந்த நிலையில், விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்டது.
டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் இன்று 7-ம் நாளை எட்டியுள்ளது. டெல்லி புறநகர்ப்பகுதியான புராரியில் சந்த் நிரங்கரி சமகம் பகுதியில் போராட்டம் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் களத்தில் ஆதரவாக இணைந்துள்ளனர்.
விவசாயிகள் 2 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் குவிந்திருப்பதால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு நேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பு ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டது.
» இந்தியாவில் கரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது: கடந்த 24 மணி நேரத்தில் 43,062 குணமடைந்தனர்
ஆனால், விவசாய சங்கப் பிரதிநிதிகளோ 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வலியுறுத்திக் கூறினர். அதனால் எந்த உடன்பாடும் ஏற்படாமல் நேற்றைய பேச்சுவார்த்தை முடிந்தது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிக்கலான அம்சங்கள், பிரச்சினைகளை மட்டும் அடையாளம் கண்டு நாளைக்குள் தெரிவியுங்கள். இது தொடர்பாக 3-ம் தேதி நடக்கும் 2-வது கட்டப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் என்று விவசாய சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், நாளைய 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களும் தான் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலாவதாக, எதிர்ப்பைப் பெற்றுள்ளது விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020. இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். விளைவித்த பொருட்களை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ள வேண்டும். இதனால், விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குப் போகும் என விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
அடுத்ததாக, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 விவசாயிகள் கண்டனத்தைப் பெற்றிருக்கிறது. இச்சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். ஆனால், ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவதால் மண்டி முறையை ஒழித்துக் கட்ட அரசு முற்படுவதாக எதிர்க்கப்படுகிறது.
கடைசியாக, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
ஆனால் இந்தச் சட்டங்கள் முழுக்க முழுக்க ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பறிக்கும், அரசு நேரடி கொள்முதலை கனவாக்கும் என விவசாயிகள் கதறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago