மத்திய அரசு கொண்டுவந்த நீதிபதிகள் நியமனச் சட்டம் செல்லாது: 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

By எம்.சண்முகம்

மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல், அவர்களுக்கு மாறுதல் உத்தரவுகளை வழங்குதல் ஆகிய பணிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மூத்த நீதிபதிகள் குழு கவனித்து வந்தது. ‘கொலீஜியம் நடைமுறை’ எனக் கூறப்படும் இந்த வழக்கம் 1993-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதை மாற்றும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமனக் குழு (என்ஜேஏசி) என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது. அரசியல் சாசன 99-வது சட்டத் திருத்தம் மூலம், தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டத் திருத்தத்துக்கு 20 மாநிலங்கள் ஒப்புதல் அளித்த பின், குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்து அமலுக்கு வந்தது.

சர்ச்சைக்குரிய 2 உறுப்பினர்கள்

இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் செயல். இச்சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற இரண்டு மூத்த நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், இரண்டு பிரபல உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு அந்த இரண்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘கொலீஜியம் முறையில் தகுதியற்ற நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு விடுகின்றனர். இந்த நடைமுறையில் வெளிப் படைத்தன்மை இல்லை என்பதால், புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது’ என்று வாதிடப் பட்டது. மேலும், கொலீஜியம் முறையை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு கொண்டு வந்துள்ள நிலையில், அதை பரிசீலனை செய்யும் தகுதி அதைவிட கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மட்டுமே உண்டு. எனவே, இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

4:1 மாறுபட்ட கருத்து

இருதரப்பையும் கேட்டறிந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று 1,030 பக்கம் அடங்கிய தீர்ப்பை வழங்கியது.

இதில், நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், மதன் லோக்கூர், குரியன் ஜோசப், ஏ.கே.கோயல் ஆகியோர், ‘மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 99-வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் மற்றும் தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் ஆகியவை நீதிமன்ற சுதந்திரத்தில் தலையிடுவதால் செல்லாது’ என்று தீர்ப்பளித்தனர். மேலும், கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

மற்றொரு நீதிபதியான ஜே.செலமேஸ்வர், மத்திய அரசின் சட்டத் திருத்தம் மற்றும் புதிய சட்டம் செல்லும் என்று கருத்து தெரிவித்ததுடன், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரும்பாமல் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒருமித்த கருத் துள்ள தீர்ப்பாக நேற்று வழங்கப் பட்டது. மேலும், கொலீஜியம் நடை முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்த நீதிபதிகள், அதற்காக வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்