புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும், புதிய உரிமைகளையும் வழங்கியுள்ளன என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 71-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது:
''விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகப் பல ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியளித்து வந்தன. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் இப்போதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆழ்ந்த ஆலோசனைகள், விவாதங்களுக்குப் பின், நாடாளுமன்றம் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.
வேளாண்மையில் கொண்டுவந்துள்ள இந்தச் சீர்திருத்தம், விவசாயிகளைப் பிரச்சினைகளில் இருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் புதிய உரிமைகளையும், வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்துவிடும். விவசாயிகளுக்கு இந்த உரிமைகள் கிடைத்தவுடன் அவர்களின் பிரச்சினைகள் குறுகிய காலத்தில் குறைந்து வருகின்றன.
இந்தச் சட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்த 3 நாட்களில் அவர்களுக்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் என்பதை உறுதியளிக்கிறது.
ஒருவேளை பணம் 3 நாட்களில் வழங்காவிட்டால், அந்த விவசாயி புகார் அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல் புகார் பெற்றபின் அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்துக்குள் புகாருக்குத் தீர்வு காண வேண்டும்.
வேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாரன் மாவட்டத்தில் உள்ள முகமது அஸ்லாம் ஜி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜிதேந்திர போஜி, வீரேந்திர யாதவ் ஆகியோர் வேளாண் மூலம் அதிகமான லாபத்தை அடைந்து வருகிறார்கள்.
விளைநிலங்களில் அறுவடைக்குப் பின் மீதமாகும் வைக்கோலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, வைக்கோல் எரிப்பதால் உருவாகும் காற்று மாசுக்குத் தீர்வு கண்டுள்ளார்கள். இவர்களுக்கு வேளாண் துறையும் உதவி வருகிறது.
வாரணாசியிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் அன்னபூர்ணாதேவி சிலை திருடப்பட்டு கனடாவுக்குக் கடத்தப்பட்டது. அந்தச் சிலை மீட்கப்பட்டு விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சாஸ்திரங்கள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்து இந்த சாஸ்திரங்களை, பாரம்பரியத்தைக் கற்கின்றனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோனாஸ் மசேட்டி எனப்படும் விஸ்வநாத்தைப் பற்றி அறிந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
கோவையில் உள்ள அர்ஷ வித்யாலயா குருகுலத்தில் 4 ஆண்டுகளாகத் தங்கி வேதாந்த தத்துவத்தை விஸ்வநாத் படித்து, நவீன தொழில்நுட்பங்கள் மூலம்தான் படித்தவற்றைப் பரப்பி வருகிறார்.
நியூஸிலாந்தில் புதிதாகப் பதவி ஏற்ற எம்.பி. கவுரவ் சர்மா சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றார். இதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரம், பெருமையுடன் திகழ்கிறது.
கரோனா வைரஸால் உலகின் முதல் நபர் பாதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன.
லாக் டவுனிலிருந்து நாம் வெளியே வந்து தற்போது கரோனா தடுப்பு மருந்து குறித்து ஆலோசித்து வருகிறோம். கரோனா குறித்து எந்த கவனக்குறையும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாளை (நவம்பர் 30) குருநானக் ஜெயந்தி கொண்டாடுகிறோம். உலகம் முழுவதும் குருநானக்கால் ஈர்க்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
டிசம்பர் 5-ம் தேதி ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாள் வருகிறது. அவரின் தத்துவங்கள், கொள்கையில் சுதேசிக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. அதைத்தான் இன்று மத்திய அரசு வலியுறுத்தி உள்நாட்டுப் பொருட்களுக்கு, தொழில்களுக்கு ஆதரவு கோரி வருகிறது.
அரவிந்தர் வெளிநாட்டிலிருந்து வருபவற்றை எதிர்க்கவில்லை. கற்றுக் கொள்ளக்கூடாது எனக் கூறவில்லை. அதேசமயம், புதிதாக எதுவாக இருந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் வலியுறுத்தினார். அதேசமயம், உள்நாட்டுப் பொருட்கள், தயாரிப்புகளுக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்தார்.
டிசம்பர் 6-ம் தேதி பாபா சாஹேப் அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அன்றைய நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், தேசத்துக்கும் அவர் அளித்த பங்களிப்பை நினைவுகூர வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago