டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன், பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும். பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இருப்பினும் விவசாயிகள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவர்களை டெல்லிக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், விவசாயிகளோ, ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில்தான் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். டெல்லி-ஹரியாணாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் குவிந்துள்ளதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் டிக்ரி பகுதியிலிருந்து வடக்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வாட்ஸ் அப் பக்கத்தில், அமித் ஷா விடுத்த வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:
''விவசாயிகள் தங்களின் போராட்டத்தை புராரி மைதானத்துக்குள் நடத்த வேண்டும். அங்கு விவசாயிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவறை வசதி, மருத்துவ வசதி அனைத்தையும் மத்திய அரசு செய்துள்ளது. அங்கு விவசாயிகள் ஜனநாயக முறையில் அமைதியாகத் தங்களின் போராட்டத்தைத் தொடரலாம்.
கடந்த இரு நாட்களாக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகள் டெல்லியின் எல்லைப்பகுதி சாலையில் குவிந்துள்ளார்கள். கடும் பனி காரணமாக விவசாயிகள் இரவு நேரத்தில் பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். மற்றவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
ஆதலால், வடக்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. அங்கு போராட்டத்தை நடத்துங்கள். அங்கு விவசாயிகள் சென்றவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
வரும் டிசம்பர் 3-ம் தேதி விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில விவசாயிகள் சங்கத்தினர் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என உறுதியளிக்கிறேன்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago