ராஜிவ் காந்தி காலம் முதல் சோனியா காந்தி காலம் வரை மிகவும் பக்க பலமாக விளங்கிய மூத்த தலைவர் அகமது படேல் இழப்பை சமாளிக்குமா காங்கிரஸ்?

By ஆர்.ஷபிமுன்னா

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் காலம் முதல் காங்கிரஸின் முக்கியப் பின்புலமாக இருந்தவர் அகமது படேல். இவரது மறைவு, ஏற்கனவே பல்வேறு வகைகளிலான தொடர் தோல்வியால் அல்லாடும் கட்சியை பலப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது.

குஜராத்தின் பரூச்சை சேர்ந்த அகமது பாய் முகம்மதுபாய் படேல் எனும் அகமது படேல் (71). மாநிலம் சார்பில் தொடர்ந்து 8 முறை
நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்தார். தம் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல், கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலமானார். இளைஞர் காங்கிரஸின் தீவிர தொண்டரான படேல் முதல் முறையாக பரூச்சின் 1976-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை கவர்ந்தார்.

இதனால் நேரடியாக தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர், ராஜிவ் காந்தி பிரதமரானது முதல் அவருக்கு நெருக்கமானார். அப்போது முதல் அவர் மறைந்தது வரை காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தினருக்கு இணையான முக்கியத்துவம், அகமது படேலுக்கு கிடைத்தது. இந்திரா மறைவுக்கு பின் 1984-ல் பிரதமரான ராஜிவின் அலுவலக செயலாளர்களாக அருண் சிங், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோருடன் அகமது படேலும் தேர்வான போது மூவரும் பாலிவுட்டின் வெற்றி திரைப்படமான, ‘அமர்- அக்பர்- அந்தோணி’ என்றழைக்கப்பட்டனர்.

சோனியாவின் நம்பிக்கையைப் பெற்ற அகமது படேல், அவரது அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 1999 முதல் 2004 வரை 14 மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாகவும் படேல் இருந்தார். பிறகு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியிலும் அகமது படேல் தவிர்க்க முடியாத தலைவராக வளர்ந்தார். தொடர்ந்து முஸ்லிம் வாக்குகளை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பெற்றதிலும் அகமது படேலின் உழைப்பு இருந்தது. இதனால், அவர் வட மாநிலங்களில் மதரஸாக்கள் எண்ணிக்கை அதிரிக்கவும் காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை அரசுக்கு படேல் ஆலோசனை அளிக்காத விஷயங்களே இல்லை எனலாம். இதுகுறித்து காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தால் பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைக்கின்றன. இவர்கள் கூற்றுப்படி, யுபிஏ ஆட்சிகளில் நடைபெற்ற சம்ஜோதா ரயில் மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்புகளிலும், மும்பை தாக்குதலின் போதும் உள்துறை அமைச்சகத்தில் அகமது படேலின் ஆதிக்கம் இருந்தது. அரசு மீதும் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் புகார் எழாத வகையில் ஊடகங்களையும் படேல் சமாளித்திருந்துள்ளார்.

இவற்றின் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரா’ சுற்றிவளைக்க தயாரான போது அதற்கு அகமது படேல் தடையாக இருந்ததாகவும் பேசப்பட்டது. இதன் பின்னணியில் அகமது படேலுக்கு இருந்த வெளிநாட்டு தொடர்புகள் காரணமானது. இதை வைத்துதான் அவரால் யுபிஏ ஆட்சிகள், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல்களில் சிக்க வேண்டி வந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

மகன் ராகுலுடனும், மூத்த தலைவர்களுடனும் சோனியாவுக்கு ஏற்படும் மனக்கசப்புகளை அகமது படேல் பேசி தீர்ப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் தலைமை மீது 23 தலைவர்கள் எழுப்பிய கடிதப் புகாரிலும் படேல் தலையிட்டு தற்காலிகமாக பிரச்சினையை முடித்து வைத்துள்ளார். இப்பிரச்சினையை சம்மந்தப்பட்ட தலைவர்களுடன் பேசி நிரந்தரமாகத் தீர்த்து, கட்சியை மீண்டும் சீரானப் பாதைக்கு கொண்டு வரும் தலையாய பணியும் படேல் முன் இருந்தது.

சமீப காலமாக தலைவர் தேர்வு செய்யாமை, மூத்த தலைவர்கள் பூசல், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வி என பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கிறது. இச்சூழலில், அவரது மறைவு காங்கிரஸுக்கும், காந்தி குடும்பத்துக்கும் பேரிழப்பாகி விட்டது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோர் அகமது படேல் விட்டுச் சென்ற பணியை ஆற்றும் வாய்ப்புகள் உள்ளன.

எனினும், அகமது படேலுக்கு மாற்றாக இனி கட்சியில் எவரும் உள்ளார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காந்தி குடும்பத்தின் வாரிசு அரசியலுக்கு பக்கபலமாக இருந்த அகமது படேல் தனது வாரிசுகளை அரசியலில் இறக்கவில்லை. இவரது ஒரே மகளும், மகனும் ஏனோ அரசியலில் இருந்து விலகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்