கரோனா தடுப்பு மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் நிலவரம் மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான முதல்வர்களுடனான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தலைமை தாங்கினார்.
அதிக கவனம் தேவைப்படும் எட்டு மாநிலங்களான ஹரியாணா, டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றின் மீது இந்த கூட்டத்தின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் வழங்குதலுக்கான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்
» நிவர் புயல்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்
» புயல் நாளை கரையை கடப்பதால் தீவிர முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் பேரிடர் மீட்புக்குழு
வலிமையான நடவடிக்கைகளின் மூலம் பெருந்தொற்றை நாடு எதிர்கொண்டது என்றும், இதர பல நாடுகளுடன் ஒப்பிடும்போது குணமடைதல் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றில் இந்தியாவில் நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பரிசோதனை மற்றும் சிகிச்சை கட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேசிய அவர், பிராணவாயு கிடைப்பதை உறுதி செய்வதன் மீது பிஎம் கேர்ஸ் நிதியம் சிறப்பு கவனம் செலுத்துவதாகக் கூறினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளை பிராணவாயு உற்பத்தியில் தற்சார்படைய செய்வதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 160 பிராணவாயு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பெருந்தொற்றுக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்று கூறிய பிரதமர், இதை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம் என்றார். முதல் கட்டத்தில் பெருந்தொற்றுக்கு மக்கள் பயந்தனர். இரண்டாவது கட்டத்தில் வைரஸ் குறித்த ஐயப்பாடுகள் எழுந்து தங்களுக்கு அறிகுறிகள் இருப்பதை பலர் மறைக்க முயற்சித்தனர். மூன்றாவது கட்டத்தில் மக்கள் ஒத்துக் கொள்ள ஆரம்பித்து வைரஸ் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.
நான்காம் கட்டத்தில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் தவறாக நினைப்பதால், கவனமின்மை அதிகரித்து வருகிறது. நான்காவது கட்டத்தில் வைரஸ் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.
பெருநோயின் பரவல் ஆரம்பத்தில் குறைந்த நாடுகளில் மீண்டும் அதிகரித்ததைப் போல் சில மாநிலங்களிலும் நடந்து வருவதாக கூறிய பிரதமர், இதை எதிர்கொள்வதற்கு நிர்வாகங்கள் அதிக எச்சரிக்கையும், கவனமும் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், நோயாளிகள், குறிப்பாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை, சிறப்பாக கவனித்தல், கிராம மற்றும் சமுதாய அளவில் உள்ள சுகாதார மையங்களில் வசதிகளை அதிகப்படுத்துதல், விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்துதல் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே கொண்டு வருவது தான் நமது இலக்கு என்று அவர் கூறினார்.
தடுப்புமருந்து உருவாக்கத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறிய பிரதமர், இந்திய உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது சர்வதேச ஒழுங்குமுறையாளர்கள், இதர நாடுகளின் அரசுகள், பன்முக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனும் அரசு தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். தேவைப்படும் அனைத்து அறிவியல் விதிமுறைகளையும் மக்களுக்கான தடுப்புமருந்து பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கோவிட்டுக்கு எதிரான போரில் ஒவ்வொரு உயிரையும் காப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டதைப் போன்று, அனைவருக்கும் தடுப்பு மருந்து அளிப்பதை உறுதி செய்வதும் முன்னுரிமையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். எளிதான, அமைப்பு சார்ந்த மற்றும் தொடர் தடுப்பு மருந்து வழங்குதலை உறுதி செய்வதற்காக அரசின் அனைத்து நிலைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மாநிலங்களுடன் ஆலோசித்த பின் தடுப்பு மருந்தின் முன்னுரிமை குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். அதிக குளிர்பதன வசதிகளின் தேவை குறித்தும் மாநிலங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிறப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக மாநில வழிகாட்டுதல் குழு மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு முதல்வர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்துகள் குறித்து பல்வேறு பொய்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை கடந்தகால அனுபவம் உணர்த்தி உள்ளதாக பிரதமர் எச்சரிக்கை செய்தார். தடுப்பு மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து வதந்திகள் பரப்பப்படலாம். சமுதாயம், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப்பணி திட்டம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதை எதிர் கொள்ளலாம் என்று பிரதமர் கூறினார்.
முதல்வர்கள் பேச்சு
பிரதமரின் தலைமையை பாராட்டிய முதல்வர்கள், சுகாதார உள்கட்டமைப்பை மாநிலங்களில் மேம்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாநிலங்களின் களநிலவரம் குறித்த விரிவான தகவல்களை முதல்வர்கள் அளித்தனர். அதிகரித்து வரும் பாதிப்புகள், கொவிட்டுக்குப் பிந்தைய சிக்கல்கள், பரிசோதனைகளை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாநிலங்களின் எல்லைகளில் நடத்தப்பட்டுவரும் பரிசோதனைகள், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தல், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், முகக் கவசம் அணியும் பழக்கத்தை அதிகப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து முதல்வர்கள் விவரித்தனர். தடுப்பு மருந்து வழங்குதல் குறித்தும் அவர்கள் ஆலோசனைகள் தெரிவித்தனர்.
தற்போதைய கோவிட் நிலவரம் குறித்த விளக்கக் காட்சியை வழங்கிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், தயார் நிலை குறித்த விவரங்களை பகிர்ந்தார். பரிசோதனை, கண்காணித்தல், அனைத்து தொடர்புகளையும் 72 மணி நேரத்துக்குள் பரிசோதித்தல், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்டுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் தரவுகளை மேம்படுத்துதல் குறித்து அவர் விவாதித்தார்.
தடுப்பு மருந்தின் விநியோகம் மற்றும் வழங்குதல் குறித்த விளக்கக் காட்சியை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago