சமூக நல்லிணக்கத்திற்காக லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் : பிஹார் அரசுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வேண்டுகோள்

By பிடிஐ

சமூக நல்லிணக்கத்திற்காக லவ் ஜிகாத்தைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று நிதிஷ்குமார் தலைமையில் பொறுப்பேற்றுள்ள பிஹார் அரசுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இதற்கான பரிந்துரையை அம்மாநில உள்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியது. உ.பி. அரசு மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகா மாநிலங்களும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து கூறுகையில், ''லவ் ஜிகாத் என்ற வார்த்தையை பாஜக உற்பத்தி செய்துள்ளது. தேசத்தைப் பிளக்கவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் இதனை அக்கட்சி உருவாக்கியுள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக பிஹாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:

லவ் ஜிஹாத் தடுக்கும் சட்டமோ மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டமோ இவை எதுவும் வகுப்புவாதத்துடன் தொடர்புடையதல்ல. ஆனால் இந்த சட்டங்கள் கொண்டுவந்தால் அவை சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது என்பதை பிஹார் மாநில அரசு உணர வேண்டும்.

லவ் ஜிஹாத் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் - இந்துக்களிடையே மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் இடையே ஓர் அச்சுறுத்தலாக உணரப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டும். லவ் ஜிகாத்தை தடுக்க பிஹார் மாநில அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அது மக்களால் விரும்பத்தக்கதாக இருக்கும். சமூக நல்லிணக்கத்திற்கும் உகந்தது.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE