"வாழ்க்கை ஒரு வட்டம். எங்கு தொடங்குகிறோமோ அங்குதான் முடிக்கிறோம் என்பதற்கு இந்தச் சம்பவம் மிகப்பெரிய உதாரணம். அதுமட்டுமல்லாமல் உடல்நலத்தில் பல்வேறு குறைகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கும், அந்த குழந்தைகளை நினைத்து வாடும் பெற்றோருக்கும் இந்தச் சம்பவம் மிகப்பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரும். "
இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தையும், தமிழகத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் கந்தசாமி, படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தனக்கு எந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உயிர் கொடுக்கப்பட்டதோ அதே மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியில் சேர்கிறார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. கடந்த 1998-ம் ஆண்டு 20 மாதக் குழந்தையாக இருந்தபோது, கல்லீரலில் (பைலியரி ஆர்ட்டிசியா) பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சஞ்சய் கந்தசாமியின் தந்தையிடம் இருந்து 20 சதவீதம் கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் குழந்தை சஞ்சய் கந்தசாமிதான். டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
» இந்தியாவில் கரோனா பாதிப்பு 90 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் 93.58 சதவீதமாக உயர்வு
மருத்துவர் அரவிந்தர் சிங் சியோன், மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சஞ்சய் கந்தசாமி மருத்துவப் படிப்பு முடித்து, தனக்கு எந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மறுபிறப்பு அளிக்கப்பட்டதோ, அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் விரைவில் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார்.
இதுகுறித்து 23 வயதாகும் மருத்துவர் சஞ்சய் கந்தசாமி ஒரு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “சிறு குழந்தையாக இருந்ததில் இருந்து மருத்துவர் ஆவது என்னுடைய கனவாக இருந்தது. நான் இன்று உயிரோடு இருப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் எனக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவர்கள்தான் காரணம். அதனால்தான் மருத்துவராகி பல உயிர்களைக் காக்க வேண்டும் என்ற லட்சியத்தை எடுத்தேன்.
நான் அறுவை சிகிச்சை மருத்துவராக எண்ணினேன். ஆனால், சூழலை உணர்ந்து குழந்தைகளைக் காக்க வேண்டும் என்பதால், குழந்தைகள் நல மருத்துவரானேன். பச்சிளங் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தல், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சையளித்தல் பிரிவில் (நியோ நானோடாலஜி) சிறப்பு நிபுணராக கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சையளித்து உயிர்காத்த மருத்துவர் அரவிந்தர் சிங் சியான் தற்போது குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கல்லீரல் மாற்று சிகிச்சை மற்றும் மருந்து மீள் உருவாக்கம் பிரிவின் தலைவராக இருக்கிறார்.
சஞ்சய் கந்தசாமி குறித்து மருத்துவர் சியான் கூறுகையில், “இரு மாதங்களாக ஐசியு பிரிவில் சஞ்சய் எனும் அந்தக் குழந்தை இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நாங்களும் அந்தக் குழந்தையுடன் இரு மாதங்களாக ஐசியுவிலேயே வாழ்ந்தோம். 2 வயதுகூட நிரம்பியிருக்காது அந்தக் குழந்தைக்கு. அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்தோம்.
மிகவும் சிக்கலான, இந்தியாவிலேயே முதல் முறையாகச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாகும். நான் அறுவை சிகிச்சை செய்த 40 குழந்தைகளும் 12 வயதுக்கு மேல் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள். இந்தக் குழந்தைகள் 40 வயதைக் கடந்து நன்றாகவே இருக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளைப் பற்றி பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், சஞ்சய் கந்தசாமி மருத்துவராகப் போவதை அறிந்து மகிழ்ச்சியில் மருத்துவர் சியான் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை செய்த மற்றொரு மருத்துவர் ராஜசேகர் கூறுகையில், “என்னுடைய 28 ஆண்டு கால மருத்துவர் வாழ்க்கையில் என்னால் அந்த அறுவை சிகிச்சையை மறக்க முடியாது. பெருமைக்குரிய தருணம். நான் அறுவை சிகிச்சை செய்த குழந்தை மருத்துவர் ஆனது எனக்குப் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago