தெலங்கானா, குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் உட்பட 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தார் சிவராஜ் சிங் சவுகான்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்தஇடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. அத்துடன் தெலங்கானா, கர்நாடகா, ம.பி., குஜராத் உட்பட 11 மாநி
லங்களில் காலியாக உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிநடைபெற்று வந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, முதல்வர் கமல்நாத்துடன் கருத்து வேறுபாடு காரணமாக ஆதரவு எம்எல்ஏ.க்கள் 22 பேருடன் பாஜகவில் இணைந்தார்.

இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக எம்எல்ஏ.க்களை கொண்டிருக்கும் கட்சி என்ற அடிப்படையில் அங்கு7 மாதங்களுக்கு முன்பு பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். இந்த சூழலில், ம.பி.யில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட ம.பி. சட்டப்பேரவையில் பாஜக.வின் பலம் 107-ஆக இருந்தது. இந்த இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அக்கட்சியால் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற சூழல்உருவானது. அதேபோல, 88 எம்எல்ஏ.க்களை வைத்துள்ள காங்கிரஸ், பெரும்பான்மை பெறுவதற்கு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. நேற்று இரவு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 7 தொகுதிகளை காங்கிரஸும், ஒரு தொகுதியை பகுஜன் சமாஜும் கைப்பற்றின.

குஜராத்தில் முழு வெற்றி

குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக.வுக்கு மாறி வந்த 5 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் தொகுதிகளும் இவற்றுள் அடக்கம்.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது முதலே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். இறுதியில் தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸில் இருந்து பாஜக.வுக்கு மாறிய பிரத்யுமான் சிங் ஜடேஜா 36,778 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாந்திலால் செங்கானியைத் தோற்கடித்தார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, “இந்த இடைத்தேர்தல் வெற்றி, வெறும் டிரைலர்தான். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2022 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்” என்றார்.

தெலங்கானா

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் துப்பாக்கா சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 86 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் ஆளும் கட்சி டிஆர்எஸ் சார்பில் சுஜாதா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரகுநந்தன், காங்கிரஸ் சார்பில் நிவாஸ் ரெட்டி ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

பத்து சுற்று எண்ணிக்கைக்கு பின்னர் டிஆர்எஸ் - பாஜக இடையேபோட்டி நிலவியது. 19-வது சுற்றில் டிஆர்எஸ் வேட்பாளர்முன்னிலை பெற்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரத்துக்குள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 20-ம் சுற்று முதல் 24-ம் சுற்று வரை பாஜக வேட்பாளர் ரகுநந்தன் மீண்டும் முன்னிலை பெற்றார்.

இறுதியில் டிஆர்எஸ் கட்சி வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் ரகுநந்தன் 1,470 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறி
விக்கப்பட்டது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் கோட்டையாக கருதப்படும் சித்திபேட்டையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது டிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா

கர்நாடகாவில் ராஜ ராஜேஸ்வரி நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 பெரிய கட்சிகளும் மோதியதால் கடும் போட்டி நிலவியது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

பாஜக வேட்பாளர்கள் முனிரத்னா (ராஜ ராஜேஸ்வரி நகர்) 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜேஷ் கவுடா (சிரா) 13
ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் அமோக வெற்றிபெற்றனர்.

எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என சிலர் கோரி வ‌ந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றி எடியூரப்பாவுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சியில் தலையிடுவதாக புகார் எழுந்த நிலையில், அவர் தலைமையில் இந்த தேர்தலில் அமோக வெற்றி கிடைத்திருப்பதால் எடியூரப்பா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மற்ற மாநிலங்கள்

உத்தர பிரதேசத்தின் 7 தொகுதிகளில் பாஜக 6, சமாஜ்வாதி ஓரிடத்தை கைப்பற்றின. ஒடிசாவின் 2 தொகுதிகளையும் ஆளும் பிஜு ஜனதா தளம் பெற்றது. நாகாலாந்தின் 2 தொகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சிஓரிடத்திலும் சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர். ஜார்க்கண்டின் 2 தொகுதிகளில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஓரிடத்திலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றன. சத்தீஸ்கரின் ஒரு தொகுதியில்காங்கிரஸ், ஹரியாணாவின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் பாஜகவும் ஒரு இடத்தில் உள்ளூர் கட்சியும் வெற்றி பெற்றன.

பிஹாரின் வால்மிகி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சுனில் குமார், காங்கிரஸ் வேட்பாளர் பர்வேஷ் குமார் மிஸ்ராவை தோற்கடித்தார். இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால், அந்தந்த மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரமாகக் கொண்டாட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்