டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலங்களில் (என்சிஆர்) இன்று நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதிவரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்யவும், பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. வாகனங்களின் புகை, பனிக்காலத்தில் ஏற்படும் பனிமூட்டம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் வயல்களில் வைக்கோல்களை எரிப்பது ஆகியவற்றால் மக்கள் சுவாசிக்கத் தகுதியற்ற அளவுக்கு காற்றின் தரம் மோசமானது.
இதில் தீபாவளி, சாத் பண்டிகை நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்தால் அதன் மூலம் உருவாகும் புகையால், காற்றின் தரம் மேலும் மோசமாகும். மேலும், கரோனா நோயாளிகள், கரோனா பாதிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்போர் மோசமான காற்றை சுவாசித்தால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்.
தற்போது டெல்லியில் 3-வது கட்ட கரோனா அலை பரவிவருகிறது. இந்தச் சூழலில் பட்டாசுகள் வெடித்தால் அதனால் உருவாகும் புகை கரோனா நோயாளிகள் உயிருக்கும், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கும் ஆபத்தாக அமையும். ஆகவே, பட்டாசுகள் வெடிக்கத் தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் விசாரித்தார். இந்த மனுக்களை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மற்றும் 4 மாநிலங்கள் பதில் அளிக்கக் கோரி கடந்த 2-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது.
அதிலும் கடந்த சில நாட்களாக டெல்லியில் ஆனந்த் விஹார், முந்த்கா, ஓல்கா பேஸ், வாசிர்பூர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. மேலும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வயல்களில் வைக்கோல்களை எரிக்கின்ற புகை, பனிமூட்டம், வாகனங்களின் கரியமில வாயு ஆகிய மூன்றும் சேர்ந்து டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, பரிதாபாத், குர்கோவன், என்சிஆர் பகுதி மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு திக்குமுக்காடச் செய்தன.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீது நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயில் இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது :
“டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இன்று (9-ம்தேதி) இரவு முதல் வரும் 30-ம் தேதிவரை அனைத்து வகையான பட்டாசுகள் விற்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு டெல்லி, என்சிஆர் பகுதிகளுக்கு மட்டுமல்ல, காற்றின் தரம் மோசமாகவும், மிக மோசமாகவும் இருக்கும் பெருநகரங்கள், சிறு நகரங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
நகரங்களில் காற்றின் தரம் மிதமானதாகவும், அதற்குக் கீழாகவும் இருந்தால், சூழலுக்குக் கேடு விளைவிக்காத க்ரீன் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகள் வெடிக்கவும் நேரக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும்.
அதாவது தீபாவளி, சாத் பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நேரக் கட்டுப்பாடு குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.
சிறு, பெருநகரங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். காற்றின் தரத்தை ஆய்வு செய்து, காற்றின் மாசைக் குறைக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம். ஆனால், நோயையும், உயிரிழப்பையும் கொண்டாடுவதற்காக இருக்கக்கூடாது. சிலரின் மகிழ்ச்சி மற்றவர்களின் உயிரைப் பறிப்பதாக இருப்பது இந்திய சமூகத்தின் மதிப்பாகஇருக்காது. மகிழ்ச்சி என்பது அனைவரின் நலனில்தான் இருக்கிறது.
அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், காவல் டிஜிபிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, பட்டாசுகள் வெடிப்பதையும், விற்பனை செய்வதையும் கண்காணிக்க வேண்டும்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த தடை காலக் கட்டத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்து தங்களின் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையையும், புள்ளிவிவரங்களையும் ஒன்றுதிரட்டி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளி்க்க வேண்டும்.
இந்தத் தடை காலத்தில் சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, வேலையிழப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள முடியாது. மக்களின் உயிரும், உடல்நலமும், சுற்றுச்சூழலும் மிகவும் முக்கியம். மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு. அந்த உரிமை என்பது மற்றவர்களால் தோற்கடிக்க முடியாத உரிமை. அதிகாரிகள் இந்த உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பசுமைத் தீர்ப்பாயம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்.
''.இவ்வாறு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயில் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago