கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. இந்த பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் சில முதலாளிகள் பயன்பெறவே என்று பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வராது. கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அவ்வாறு ஏதும் கூறப்படவில்லை. மிகக்குறைந்த அளவே கள்ளநோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் வரும்போதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து, போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்து இன்றுடன் 4-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.
காங்கிரஸ் கட்சி இந்த நாளை "துரோக நாள்" என்று இந்த ஆண்டு கடைப்பிடிக்கிறது. சமூக வலைதளங்களில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும், அதன் மோசமான பாதிப்பு குறித்தும் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டிருந்தது.
மேலும், மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் குறித்துத் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பண மதிப்பிழப்பு பேரழிவுக்கு எதிராகப் பேசுவோம் என்ற தலைப்பிலான வீடியோவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
''கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படவில்லை. இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டன.
எனக்கு எழுந்த கேள்வி உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று இந்தியாவைக் கூறிய நிலையில், எவ்வாறு இந்தியப் பொருளாதாரத்தை வங்கதேசம் முந்திச் சென்றது.
ஆனால், இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு கரோனா வைரஸ்தான் காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கரோனாதான் காரணமாக இருந்தால், வங்கதேசத்திலும் கரோனா பாதிப்பு இருந்தது. உலகின் பலநாடுகளில் கரோனா பாதிப்பு இருந்தது. ஆதலால், பொருளாதாரச் சீரழிவுக்கு கரோனா வைரஸ் காரணம் அல்ல. உண்மையான காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியும்தான்.
4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதத்தை இழந்துவிட்டது என்று மன்மோகன் சிங் தெரிவித்தார். அதை நாமும் பார்த்தோம்.
ஆனால், கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் என்று பிரதமர் மோடி பண மதிப்பிழப்பைத் தெரிவித்தார். ஆனால், உண்மை அது அல்ல. பிரதமர் மோடி கூறுவது பொய். பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது உங்கள் மீதான தாக்குதல். உங்களிடம் இருந்து பணத்தை எடுத்து, அவரின் சில முதலாளித்துவ நண்பர்களுக்குக் கொடுக்க விரும்பினார்.
உங்கள் சொந்தப் பணத்தை எடுக்க நீங்கள் வங்கியின் வாசலில் வரிசையில் நின்றீர்கள். மோடியின் முதலாளித்துவ நண்பர்கள் யாரும் வங்கி வாசலில் நிற்கவில்லை. நீங்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தீர்கள். அந்தப் பணத்தை எடுத்து பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குக் கொடுத்து, ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்.
தவறான ஜிஎஸ்டி வரியை மோடி அறிமுகம் செய்து, சிறு, நடுத்தர வர்த்தகத்தை அழித்து, தன்னுடைய 3 முதல் 4 முதலாளித்துவ நண்பர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
இப்போது விவசாயிகள் மீது குறிவைத்துள்ள மத்திய அரசு, 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையை முடிக்க முயல்கிறது. இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார் மோடி. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வோம்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago