பெண் கான்ஸ்டபிளைத் தாக்கினாரா? கரோனா விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செய்திகள்- அர்னாப் மீதான வழக்குகள் விவரம்

By செய்திப்பிரிவு

மும்பை ராய்காட் போலீஸ் புதனன்று ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 2018ம் ஆண்டு புகார் எழுப்பப்பட்ட ஒரு தற்கொலைத் தூண்டுதல் வழக்கில் மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பானது.

தற்போது அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் பள்ளி ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் கோரல் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

இவரது ரிபப்ளிக் டிவி சேனலில் செய்திகளை ஒருதலைப்பட்சமாக அளிப்பவர் என்றும் மதநல்லிணக்கத்துக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்துத் தாக்கி செய்தி வெளியிடுவதாகவும்,நடுநிலையற்றவர் என்றும் அர்னாப் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

ஆனால் நடிகர் சுஷாந்த் வழக்கில் தற்கொலை இல்லை என்ற ரீதியில் புலன் விசாரணை நடத்துவதாக ரிபப்ளிக் டிவி ஆளும் சிவசேனாவை அதில் ஈடுபடுத்தி செய்திகள் வெளியிட்டதும் அர்னாபுக்கு எதிரான சிவசேனாவின் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றே சிவசேனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது 2018-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு தொடுத்த வழக்குகளைப் பார்ப்போம்:

53 வயது கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் இவரது தாயார் குமுத் நாயக் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அன்வர் நாயக் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே புகார் பட்னாவிஸ் முதல்வராக இருந்த போதும் வந்தது, ஆனால் இழுத்து மூடப்பட்டது, தற்போது சிவசேனா, என்சிபி, காங் கூட்டணி ஆட்சியில் மீண்டும் திறக்கப்படுகிறது, இது பழிவாங்கும் செயல் என்று பாஜக தரப்பினர் இவருக்கு வரிந்து கட்டுகின்றனர். மற்ற ஊடகவாதிகள் கைது செய்யப்படும்போதெல்லாம் வாயைத்திறக்காத பாஜக இவருக்கு மட்டும் வாயைத்திறக்கிறது என்றால் இவரது அடையாளம் தெரிகிறது அல்லவா என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

அலிபாக் தற்கொலை வழக்கு:

கான்கார்ட் டிசைன்ஸின் உரிமையாளர் அன்வய் நாயக். இவரது தாய் குமுத் நாயக். இருவரும் அலிபாக் கவிர் கிராமத்தில் வீட்டில் மர்மாக இறந்து கிடந்தனர், இது நடந்தது 2018 மே மாதம்.

போலீஸார் தற்கொலை குறிப்பைக் கண்டெடுத்த போது அதில் 3 நிறுவன உரிமையாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது, ஒன்று ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி, இரண்டு, ஐகேஸ்ட் ஸ்கை மீடியாவின் பெரோஸ் ஷெய்க், மூன்று, ஸ்மார்ட் வொர்க்ஸ் நிறுவனத்தின் நீதிஷ் சர்தா.

இவர்கள் மூவரும் முறையே நாயக் நிறுவனத்துக்கு ரூ.83 லட்சம், ரூ.4 கோடி, ரூ.55 லட்சம் தொகை கொடுக்க வேண்டியிருந்ததாக தற்கொலை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தொகையைக் கொடுக்காததினால் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏப்ரல் 2019-ல் ஆதாரம் இல்லை என்று இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தற்போதைய மகா. அரசு இதனை மீண்டும் திறந்தது. இந்நிலையில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கான்ஸ்டபிளைத் தாக்கினாரா?

அர்னாபை வொர்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்த போது கைதைத் தடுக்க பெண் கான்ஸ்டபிளை அர்னாப் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதனையடுத்து அரசு ஊழியரை பணியைச் செய்ய விடாமல் செய்தது, தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர் பதிவேட்டில் அர்னாப் மனைவி, மகன் மற்றும் இருவர் பெயரும் பதியப்பெற்றுள்ளது.

போலீஸ் குழுவினரிடையே விரோதப்போக்கை வளர்க்கும் செய்தி:

கடந்த மாதம் கமிஷனர் பரம்வீர் சிங் தலைமை போலீஸ் படையில் பிளவு இருப்பதாகவும் இவருக்கு எதிராக சில போலீஸார் போர்க்கொடி தூக்கியதாகவும் ரிபப்ளிக் டிவி செய்தி வெளியிட்டது. இதனையடுத்து போலீஸார் இடையே விரோதப்போக்கை வளர்த்து விடுவது பகைமையை வளர்த்து விடுவது என்ற பிரிவின் கீழ் மும்பை போலீஸ் ஒரு வழக்கை ரிபப்ளிக் டிவி சீனியர் எடிட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது.

டிஆர்பி ரேட்டிங் முறைகேடு புகார்:

மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் அக்டோபர் 8ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து தனியார் தொலைக்காட்சி சேனல்கள் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்டுகளுக்காக அதிக வருவாயைக் குறிவைத்து மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா போன்ற சேனல்களை அவர் இந்த முறைகேட்டில் சுட்டிக்காட்டினார்.

இதில் நேரடியாக அர்னாப் பெயர் இல்லாவிட்டாலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாட்சியங்களின் படி அர்னாப் பெயரை அவர்கள் கூறியதாகவும் தன் சேனலைப் பார்க்க மக்களுக்கு காசு கொடுத்ததாகவும் புகார் சொன்னதாகவும் மும்பை போலீஸ் கூறியது, இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை மும்பை போலீஸ் கைது செய்தது.

பால்கர் இந்து சாமியார்கள் அடித்துக் கொலை விவகார வழக்கு:

ஏப்ரல் 16ம் தேதியன்று மும்பையைச் சேர்ந்த 2 இந்து சாமியார்கள், இவர்களது டிரைவர் ஆகியோரை பால்கர் மாவட்ட கட்சின்சலே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருடர்கள் என்று அடித்துக் கொன்றுவிட்டனர். இவர்கள் தாத்ரா நாகர் ஹவேலிக்குச் சென்று கொண்டிருக்கும் போது கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை ரிபப்ளிக் டிவி கையிலெடுத்து செய்திகளை அளித்து வந்தது. அப்போது மும்பை போலீஸ் அர்னாப் கோஸ்வாமிக்கு எச்சரித்து நோட்டீஸ் அனுப்பினர், இந்த விவகாரத்தில் தாங்கள் அளிக்கும் தகவல்கள் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் என்று எச்சரித்தனர். ஏன் ரிபப்ளிக் டிவியிடமிருந்து நன்னடத்தை உறுதிப் பத்திரம் ஏன் கோரக்கூடாது என்று விளக்கம் கேட்டு மும்பை போலீஸ் அர்னாபுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக அர்னாப் காங்கிரஸ் தலைவர் சோனியாதான் சாமியார்கள் கொலைக்குக் காரணம் என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். இதற்கு நாடு முழுதும் 15 முதல் தகவலறிக்கைகள் ரிபப்ளிக் டிவி மீது பதியப்பட்டது. இதனடிப்படையில் சமூக செயல்பாட்டாளர் நீலேஷ் நவ்லக்கா அர்னாப் மீது மதத்துவேஷத்தை வளர்ப்பதாக புகார் அளித்தார்.

பாந்த்ராவில் ஒன்று திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்:

ஏப்ரல் 14ம் தேதியன்று முதல் லாக்டவுனில் நாடு தத்தளித்துக் கொண்டிருந்த போது மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் ஒன்று திரண்டனர். தங்கள் சொந்த ஊருக்கு, வீட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரினர்.

ஆனால் கோஸ்வாமி தன் செய்தியில் மசூதி அருகே கூட வேண்டிய அவசியம் என்ன என்ற ரீதியில் செய்தி தொகுத்தளித்தார். அதாவது சமூக இடைவெளி இல்லை என்று கூறி முஸ்லிம் சமூகத்தினர் சதி வேலையில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி செய்தி கட்டினார்.

இதனையடுத்து அளித்த புகாரில் கோஸ்வாமி மீது மும்பை போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதாவது முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை தூண்டுவதாக எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்