பிரதமர் மோடியின் ‘பயோபிக்’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தேர்தல் விதிமுறைமீறலில் வராது: தேர்தல் ஆணையம் விளக்கம்


பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் திரைப்படத்தை மீண்டும் ரீலீஸ் செய்வது எந்தவிதத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் வராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் 3-ம் தேதி நடக்கிறது. இதில் பிஹார் மாநிலத்தில் முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடந்துவிட்டது. அடுத்தஇருகட்டத் தேர்தல் வரும் 3ம் தேதி 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது, 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில் பிஹார் தேர்தல் நடைபெறும்போது, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தை ரீலீஸ் செய்து மக்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். அக்டோபர் 15-ம் தேதி மோடியின் பயோபிக் படம் மீண்டும் பிஹாரில் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் தனிநபர் ஒருவர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரை ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் “ பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்வதில் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை.

அவ்வாறு படத்தை வெளியிடுவது விதிமுறை மீறலிலும் வராது. இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல பிஹார் தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவின் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதில், “ பிஹாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளித்தபின், அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” என அறிவித்தார்.

பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் அறிவிப்பு, கரோனாவை பயன்படுத்தி அரசியல் ஆதாயம்தேடும் முயற்சி இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் புகார் கூறின.

இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அதில் “ தேர்தல் வாக்குறுதியில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது. இந்த அறிவிப்பில் எந்தவிதமான விதிமுறைமீறலும் இல்லை.

தேர்தல் அறிக்கைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிமுறைகள் 8-ம் பிரிவில் இருக்கிறது. அந்த வகையில் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கும் பாஜகவின் வாக்குறுதியை விதிமுறை மீறலில் சேர்க்க முடியாது” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE