'பிஹாரில் நிதிஷ் குமாருக்கு எதிரான அலையால் தோற்றுவிடுவோம்' - பாஜக கூட்டணியிலிருந்து விலகும் முன் ஜே.பி.நட்டாவுக்கு சிராக் பாஸ்வான் கடிதம்

By பிடிஐ

பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு எதிரான அலை வீசுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிய முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் எனக் கோரி பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முன், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று காலமான நிலையில் இந்தக் கடிதத்தை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது.

பிஹாரில் இம்மாதம் இறுதியில் இருந்து நவம்பர் 8-ம் தேதி வரை 243 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாருக்கும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மறைமுகமான மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலைச் சந்திக்க முடியாது. ஆனால், பாஜகவுடன் இணைந்து சந்திக்கத் தயார் என்று சிராக் பாஸ்வான் அறிவித்தார்.

ஆனால், இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. பிரதமர் மோடியின் படத்தைக்கூட பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தது. பிஹாரில் நடக்கும் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களைத் தவிர்த்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும் 143 இடங்களிலும் அந்தக் கட்சியை எதிர்த்து லோக் ஜனசக்தி போட்டியிடும் என சிராக் பாஸ்வான் அறிவித்தார்.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகி, தனித்துப் போட்டியிடுவதாகவும் லோக் ஜனசக்தி அறிவித்தது.

இந்தச் சூழலில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு முன் கடந்த மாதம் 24-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை அந்தக் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், “மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது. இது தோல்விக்கு இட்டுச் செல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிய முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

எங்கள் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக தேசிய ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்பட வெளிப்படையாக அறிவித்த நிலையில்கூட, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவிக்காமல் எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானை அவமதித்தார்.

என் தந்தையின் உடல்நலக் குறைவு குறித்து பிரதமர் மோடி அடிக்கடி விசாரித்த நிலையில், அதை அறியாமல் நிதிஷ் குமார் மட்டும் கேட்கவே இல்லை.

கடந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் லோக் ஜனசக்திக்கு ஆதரவு தர நிதிஷ் குமார் மறுத்துவிட்டார். என் தந்தை நேரில் சென்று நிதிஷ் குமாரைச் சந்தித்த பின்பு ஆதரவு அளித்தார். என் தந்தையை அவமதித்த நிதிஷ் குமார் மீது எங்கள் கட்சியினர் மிகுந்த அதிருப்தியுடனும், வேதனையுடனும் இருக்கிறார்கள்.

மாநிலத்தில் நிதிஷ் குமாரின் செயல்பாடுகள் பாஜக தலைவர்களுக்கே அதிருப்தியாக இருக்கிறது. மாநிலத்தில் மோடியின் புகழ் வளர்ந்து வருகிறது. இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் இணையப் போவதில்லை. அதேசமயம், எங்கள் கட்சி பாஜக நலனுக்கு எதிராகச் செயல்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்