கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வங்கிக் கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்தும் தொகைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில், ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அடுத்த 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி, வட்டிக்கு வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருந்தது. 2 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இனிமேல் அவகாசம் அளிக்க இயலாது. விரைவில் முடிவைக் கூறுங்கள் எனக் கூறி வழக்கை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கரோனா காலத்தில் வங்கியில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ள தனிநபர்கள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்விக் கடன், வீட்டுக் கடன், வீட்டுப் பொருட்கள் வாங்குதல், வாகனக் கடன், தனிநபர்க் கடன் என அனைத்துக் கடன்கள் மீதான வட்டி மீது வட்டி அடுத்த 6 மாதங்களுக்கு விதிக்கப்படாது.
ஆனால், ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. இந்த வட்டிக்கு வட்டி விதிக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.
அனைத்துச் சூழல்களையும் ஆய்வு செய்து, கவனமாகப் பரிசீலித்து, அனைத்துச் சாதகமான வாய்ப்புகளையும் ஆராய்ந்து அரசு இந்த முடிவை எடுத்து, சிறு கடன் பெற்றவர்களுக்கு உதவியுள்ளது.
கூட்டுவட்டியைத் தள்ளுபடி செய்வதன் மூலம் குறிப்பிடத்தகுந்த அளவு நிதிச்சுமை, அழுத்தம் வங்கிக்கு ஏற்படும். இந்தச் சுமையை வங்கிகள் மட்டும் தாங்கிக்கொள்வது சாத்தியமில்லை.
இந்தச் சூழலில் ஒரே வாய்ப்பு கூட்டுவட்டி தள்ளுபடிச் சுமைகளை மத்திய அரசு தாங்கிக்கொள்வதுதான். ஏற்கெனவே பல்வேறு அழுத்தங்களை இந்த அரசும், தேசமும் தாங்கி வரும் நிலையில், அரசின் இந்த முடிவு நீதிமன்றத்துக்குத் திருப்தி அளிக்கும்.
அதேசமயம், வங்கியில் கடன் தவணை செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு வாராக் கடனாக அறிவிக்கப்பட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அது வாராக் கடனாகக் கருதப்படாது.
கடன் வாங்குவோர் கடனில் வட்டி தள்ளுபடிக்கும், கடன் தவணையில் தாமதமாகச் செலுத்துவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை ஏற்கவில்லை.
ஆதலால், எத்தனை சதவீதம் வாடிக்கையாளர்கள் கடன் தவணை செலுத்தும் அவகாசத்தைப் பெறவில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிட இயலாது. ஏறக்குறைய 50 சதவீதத்துக்கு மேல்கூட இருக்கலாம்''.
இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago