பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் உருவானக் கலவரம் மீதான நினைவுகளை அயோத்திவாசிகள் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பகிர்ந்து கொண்டனர். இதில் அவர்கள், முஸ்லிம்களுக்காக கோயில் கதவுகள் திறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
விஷ்வ இந்து பரிஷத்தால் கடந்த டிசம்பர் 6, 1992 இல் கரசேவைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து கூடிய கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதையடுத்து அயோத்தியில் நிகழ்ந்த கலவரத்தால் சுமார் ஒரு மாதம் வரை ஊரடங்கு நீடித்தது. இங்கு உட்பட நாடு முழுவதிலும் பல பகுதிகளில் உருவான கலவரத்தில் சுமார் 2000 உயிர்கள் பலியானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான சிபிஐ வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதில், குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் சாட்சிகள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், மசூதி இடிப்பிற்கு பின் அங்கு உருவான கலவரம் குறித்து அயோத்திவாசிகளில் சிலர் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பகிர்ந்த நினைவுகள் பின்வருமாறு:
மன்ஸர் மெஹந்தி, உருது பத்திரிகையாளர்: அப்போது அயோத்தியில் கலவரம் மூண்டுவிட, அருகில் நாம் வசித்த பைஸாபாத் அமைதியாகவே இருந்தது. அயோத்தியில் பல முஸ்லிம்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
வெளியில் இருந்து வந்த கரசேவகர்கள் கலவரத்தில் ஈடுபட, உள்ளூர்வாசிகள் தமக்குள் அறிமுகமானவர்கள் என்பதால் அமைதியாகவே இருந்தனர். இவர்களில் பலர் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளித்து காத்தது நல்ல விஷயமாக இருந்தது.
பாபர் மசூதியின் முத்தவல்லியும் முக்கிய மனுதாரருமான ஹாசிம் அன்சாரி உள்ளிட்ட பலரும் தனது குடும்பத்துடன் பைஸாபாத்தில் தங்கி தப்பினார்.
சாதிக் அலி, அயோத்யா முஸ்லிம்கள் நலச்சங்கத்தின் தலைவர்: பாபர் மசூதிக்கு அருகிலுள்ள ஹனுமர்கடி கோயில் மற்றும் மடத்தின் கதவுகள் முஸ்லிம்களுக்காக திறந்து விடப்பட்டது.
அதன் வெளியே மடத்தின் சாதுக்கள் காவலுக்கு நின்று கலவரம் முடியும் வரை முஸ்லிம்களை பாதுகாத்தனர். மூன்று வேளை உணவும் அளித்து உதவினர். அப்போது அயோத்தியில் சுமார் 4,500 முஸ்லிம்கள் மட்டுமே இருந்தனர்.
மற்றவர்கள் கலவரத்தை எதிர்பார்த்து முன்னதாகவே வெளியூரில் உள்ள தம் உறவினர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்று விட்டனர்.
அனுராக் சுக்லா, அயோத்திவாசி: இங்குள்ள கோதியானா பகுதியில் சுமார் 60 முஸ்லிம் வீடுகள் இருந்தன. அவற்றை சூழ்ந்து நின்ற அப்பகுதியின் இந்து சமூக மூத்தவர்கள் கலவரக்காரர்கள் உள்ளே நுழையாதபடி தடுத்து பாதுகாத்தனர்.
இரவும், பகலும் அப்பகுதியில் தங்கி இருந்தனர். இதனால், அங்கிருந்த சுமார் 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டதை மறக்க முடியாது.
மஹந்த் ஜுகல் கிஷோர் சாஸ்திரி, சரயு குண்ட் மடத்தின் தலைவர்: ராஜ்காட், மீராபூர் புலந்தி, தொராஹி குவான் ஆகிய பகுதிகளின் முஸ்லிம்கள் அனைவரும் எங்கள் போன்ற சாதுக்கள் மடங்களில் தஞ்சம் புகுந்து காப்பாற்றப்பட்டனர்.
அந்நாட்களில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த பராக் லால் யாதவ் தனது வீட்டில் ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு அடைக்கலம் அளித்தார். அவர்கள் கைகளில் இருந்து துள்ளி ஓடிய 3 வயது மகன் கலவரக்காரர்களிடம் சிக்கி விட்டார்.
அக்குழந்தை தனது எனக் கூறி காப்பாற்றினார் பராக் லால். அன்று காப்பாற்றப்பட்ட குழந்தையான முன்னா இங்கு டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago