கரோனா வைரஸ், மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
அதேசமயம், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தத் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
வசீர்ரெட்டி கோவர்த்தனா சாய் பிரகாஷ் மற்றும் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் 20-க்கும் மேற்பட்டவர்களும் கரோனா வைரஸ், மழை வெள்ளம் ஆகியவற்றைக் காரணம் காட்டி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரி தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்களன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
யூசிபிஎஸ் சார்பில் என்ன மாதிரியான ஏற்பாடுகள், தேர்வு எழுதுவோருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் யூபிஎஸ்சி தரப்பு இன்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு அக்டோபர் 4-ம் தேதி தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து யூபிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என ஆணையத்துக்குக் கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே 31-05-2020 நடத்தப்படவேண்டிய இந்தத் தேர்வு கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு உரிய அவகாசத்தை வழங்கியுள்ளது.
யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைத்தால் காலந்தோறும் பின்பற்றிவரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகள் தேர்வு நடப்பதையும் சேர்த்து பாதிக்கும். யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைத்தால் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு அரசின் முக்கியப் பொறுப்புகளில் அதிகாரிகளை நியமிப்பதில் பாதிப்பை உருவாக்கும்.
நீட் தேர்வுகளை நடத்த அனுமதித்ததைப் போல யூபிஎஸ்சி தேர்வுகளையும் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், என்டிஏ மற்றும் நேவல் அகாடமி தேர்வுகள் கடந்த செப்.9 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
அதேபோல, யூபிஎஸ்சி தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. யூபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 60 சதவீதம் பேர் ஏற்கெனவே நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டும் யூபிஎஸ்சி தேர்வுகளை எழுத விரும்புவோருக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதுவே சம உரிமை ஆகும்.
ஏற்கெனவே இந்தத் தேர்வுகளை நடத்த 50.39 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் தேர்வுகளை ரத்து செய்தால் அது ஆணையத்துக்கு இழப்பை ஏற்படுத்தும். தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதோடு, உரிய வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு மாநிலத் தலைமைச் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதிகள் ஏம்.எம்.கான்வில்கர், பிஆர் காவே, கிருஷ்ணா முராரி பிறப்பித்த உத்தரவில், “வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. அதேசமயம், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தத் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அனைத்தையும் காரணம் காட்டி மாணவர்கள் தேர்வைத் தள்ளிப்போட முடியாது.
தேர்வு எழுதுவோர் அரசு ஊழியர்களாக மாறப்போகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் மாற வேண்டும். தேர்வு எழுதுவோர் தங்களுக்குரிய வசதியான சூழலில் இருந்தும், காரணம் தேடுவதிலிருந்து வெளியே வர வேண்டும் என விரும்புகிறோம்.
யூபிஎஸ்சி பிரமாணப் பத்திரத்தை நாங்கள் பார்த்தோம். அவர்கள் தேர்வை நடத்தத் தேவையான ஏற்பாடுகளை முழுமையாகச் செய்துள்ளார்கள். தேவைப்பட்டால் இன்னும் அதிகமான வசதிகளைச் செய்துகொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சில மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காகத் தேர்வுகளை நடத்தக்கூடாது என்பது தர்க்கரீதியாக சரியல்ல” என்று உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago