அனைத்து பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு; அக்டோபர் 2 -ம் தேதி சிறப்பு 100 நாள் பிரச்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாட்டிலுள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு குடிதண்ணீர் இணைப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு 100 நாள் பிரச்சாரம் ஒன்று ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடம் அக்டோபர் 2 அன்று தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ஆறு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உத்தரகாண்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கங்கை ஆற்றைப் பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான கங்கா அவலோக்கனையும் மோடி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். "ரோவிங் டவுன் தி காஞ்சஸ்" இன்னும் புத்தகத்தையும் ஜீவன் இயக்கத்தின் புதிய இலச்சினையையும் அவர் வெளியிட்டார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பை அளிப்பதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கம் என்றார். இந்த இயக்கத்தின் புதிய இலச்சினை ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிப்பதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று மோடி கூறினார்.

வழிகாட்டுதல்களைப் பற்றி பேசிய பிரதமர், கிராம பஞ்சாயத்துகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், அரசு இயந்திரத்துக்கும் அவை சம அளவில் முக்கியமானவை என்றார்.

“ரோவிங் டவுன் தி காஞ்சஸ்” புத்தகத்தைப் பற்றி பேசிய பிரதமர், நமது கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் ஒளிரும் அடையாளமாக கங்கை எவ்வாறு திகழ்கிறது என்பதைப் பற்றி அது விரிவாக விளக்குவதாகக் கூறினார்.

கங்கையாறு, அது தொடங்கும் இடமான உத்தரகாண்டில் இருந்து மேற்கு வங்கம் வரை நாட்டின் சுமார் 50 சதவீத மக்களின் வாழ்வுகளில் முக்கிய பங்கை ஆற்றுவதாக குறிப்பிட்ட மோடி இப்படிப்பட்ட ஆற்றை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் என்றார்.

நமாமி கங்கே இயக்கம் என்பது மிகப்பெரிய ஆறு பாதுகாப்பு இயக்கம் என்றும் கங்கை ஆற்றின் தூய்மையைப் பற்றி மட்டுமே அது கவனம் செலுத்தாமல் அந்த ஆற்றின் ஒருங்கிணைந்த பேணுதலையும் லட்சியமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். இந்த புதிய சிந்தனையும் செயல்பாடும் கங்கை ஆற்றை பழைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பழைய நடைமுறைகள் தொடர்ந்திருந்தால் நிலைமை இன்றைக்கு மோசமாக இருந்திருக்கும். பழைய முறைகளில் மக்களின் பங்களிப்பும் தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

இந்த லட்சியத்தை அடைவதற்காக நான்கு முனை யுக்தியை அரசு செயல்படுத்தியது என்று பிரதமர் கூறினார். முதலாவது- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் வலைப்பின்னலை அமைத்து கங்கை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது.

இரண்டாவது- அடுத்த பத்து, பதினைந்து வருடங்களின் தேவைகளை மனதில் வைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டமைக்கப்பட்டன.

மூன்றாவது- கங்கை ஆற்றை ஒட்டியுள்ள சுமார் 100 பெரிய மாநகரங்கள் நகரங்கள் மற்றும் 5,000 கிராமங்களை திறந்த வெளி கழிப்பறைகளிலிருந்து இருந்து விடுவித்தது.

நான்காவது- கங்கை ஆற்றின் கிளை ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க முழு மூச்சாக முயற்சிகளை எடுத்தது. நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ரூபாய் 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய திட்டங்கள் முடிக்கப்பட்டோ அல்லது செயல்படுத்தப்பட்டு கொண்டோ இருப்பதாக மோடி தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் மூலம் உத்தரகாண்டின் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கங்கையாற்றில் பாய்ந்து கொண்டிருந்த 130-க்கும் அதிகமான கால்வாய்கள் கடந்த ஆறு வருடங்களில் மூடப்பட்டன என்று பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக ரிஷிகேஷில் உள்ள முனி கி ரேட்டியில் இருக்கும் சுந்தரேஸ்வர் நகர் கால்வாய் பார்வையாளர்களுக்கும், படகில் செல்பவர்களுக்கும் அருவருப்பு அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிரகாய ராஜ் கும்பில் யாத்திரிகர்கள் அனுபவித்ததைப் போலவே, உத்தரகாண்டில் கங்கை ஆற்றின் தூய்மை மற்றும் புனிதத்தன்மையை ஹரித்வார் கும்புக்கு வரும் பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள் என்று பிரதமர் கூறினார். கங்கையாற்றின் நூற்றுக்கணக்கான படித்துறைகளை அழகுபடுத்தியது பற்றியும் ஹரித்துவாரில் நவீன ஆற்றங்கரையை உருவாக்கியது பற்றியும் மோடி குறிப்பிட்டார்.

கங்கா அவ்லோகன் அருங்காட்சியகம் யாத்திரிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் கங்கை தொடர்புடைய பாரம்பரியத்தை புரிந்து கொள்ள அது மேலும் உதவும் என்றும் பிரதமர் கூறினார்.

கங்கையைத் தூய்மை படுத்துவது தவிர ஒட்டுமொத்த கங்கை பகுதியில் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்தும் நமாமி கங்கே இயக்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார். இயற்கை விவசாயம் மற்றும் ஆயுர்வேத விவசாயம் ஆகியவற்றை ஊக்கப்படுத்த விரிவான திட்டங்களை அரசு வகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வருடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டால்ஃபின் இயக்கத்தையும் இந்த திட்டம் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தண்ணீர் தொடர்பான வேலைகள் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பிரிந்து இருந்ததால் தெளிவான வழிகாட்டுதல்களும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக பிரதமர் கூறினார். சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆன பின்பும் நாட்டில் உள்ள 15 கோடி வீடுகளுக்கு மேல் குழாய் மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் சென்றடையவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த சவால்களை சமாளிக்கவும், இந்தத் துறைக்கு புதிய ஊக்கத்தை அளிக்கவும் ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளை உறுதி செய்யும் முயற்சியில் இந்த அமைச்சகம் தற்போது ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்றைக்கு ஜல்சக்தி இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமான குடிதண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரே வருடத்தில் 2 கோடி குடும்பங்களுக்கு குடிதண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 4-5 மாதங்களில் கரோனா காலத்திலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிதண்ணீர் இணைப்பை வழங்கியதற்காக உத்தரகாண்ட் அரசை அவர் பாராட்டினார்.

முந்தைய திட்டங்களை போல இல்லாமல் கீழிருந்து மேல் அணுகுமுறையை ஜல் ஜீவன் இயக்கம் கடைப்பிடிப்பதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்த திட்டத்தின் செயல்படுத்துதல், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை கிராமங்களிலுள்ள பயனர்களும், தண்ணீர் குழுக்களும் திட்டமிடுவதாகவும் பிரதமர் கூறினார்.

தண்ணீர் குழுக்களில் குறைந்தது 50% உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த இயக்கம் உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார். இன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் சரியான முடிவுகளை எடுக்க தண்ணீர் குழு மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு குடிதண்ணீர் இணைப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு 100 நாள் பிரச்சாரம் ஒன்று ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடம் அக்டோபர் 2 அன்று தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

விவசாயிகள், தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்காக மிகப்பெரிய சீர்திருத்தங்களை அரசு சமீபத்தில் கொண்டுவந்ததாக பிரதமர் கூறினார்.

இந்த சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் எதிர்க்க வேண்டுமே என்பதற்காக மட்டுமே இவற்றை எதிர்ப்பதாக மோடி கூறினார். தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து எந்த கவலையும் எப்போதும் கொள்ளவில்லை என்றார் அவர்.

இவர்களுக்கு விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் லாபகரமான விலைக்கு தங்களது விளைபொருட்களை விற்பதில் விருப்பமில்லை என்று பிரதமர் கூறினார்.

ஜன்தன் வங்கி கணக்குகள், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம், சர்வதேச யோகா தினம் போன்று மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததை பிரதமர் பட்டியலிட்டார்.

இவர்கள்தான் விமானப்படையை நவீனமயமாக்கியதையும், நவீன போர் விமானங்கள் வாங்கியதையும் எதிர்த்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். இவர்களே தான் அரசின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை எதிர்த்தார்கள் என்றும் ஆனால் ஏற்கனவே ரூபாய் 11,000 கோடியை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்கள்தான் ராணுவத்தின் துல்லிய தாக்குதலை விமர்சனம் செய்து துல்லிய தாக்குதல் நடைபெற்றதை நிரூபிக்குமாறு வீரர்களை கேட்டதாக பிரதமர் கூறினார் அவர்களது உண்மையான நோக்கங்கள் என்ன என்பதை இவை நாட்டுக்கு தெளிவாக தெரிய படுத்துவதாக மோடி கூறினார்.

எதிர்க்கும் மற்றும் போராட்டங்களை மேற்கொள்ளும் இவர்கள் காலப் போக்கில் மதிப்பிழப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்