லடாக்கில் உறைய வைக்கும் கடும் குளிரிலும் ‘நெருப்பு மற்றும்சீற்றம்’ படைப் பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். பனி தாங்க முடியாமல் பின்வாங்குவார்கள் என்ற சீனாவின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, இந்திய ராணுவ வீரர்கள் போருக்கு தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடிக்கிறது. ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் நிலைமை சீராகவில்லை. லடாக்கில் தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த குளிர் காலத்தில் இரவில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைய வைக்கும் குளிர் நிலவும். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்து பின்வாங்கிவிடுவார்கள் என்று சீன ராணுவம் கூறிவந்தது.
ஆனால், இந்திய ராணுவ வீரர்கள், லடாக் எல்லைப் பகுதிகளில் உறைய வைக்கும் கடும் குளிரில் சுமார் 5,800 மீட்டர் உயர மலைமுகடுகளில் போருக்கு தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
சீன ராணுவத்தை சேர்ந்த சுமார் 50,000 வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இணையாக இந்திய வீரர்கள் லடாக் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். பான்காங் ஏரியின் பிங்கர் 4 உள்ளிட்ட முக்கிய மலைமுகடுகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. சுமார் 5,800 மீட்டர் உயர மலைமுகடுகளில் உறைய வைக்கும் குளிரில் இந்திய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் குவிந்துள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்களால் எளிதாக கண்காணிக்க முடியும்.
இந்திய ராணுவ தரப்பில் டி-90, டி72 டாங்கிகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்த வகை டாங்கிகள் மூலம் இந்திய வீரர்களால் போரிட முடியும்.
வீரர்களுக்கு தேவையான குளிர் தாங்கும் உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகின்றன. சுமார் 40 நாட்கள் போருக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கையிருப்பில் உள்ளன. .
சீனாவின் ஹோடன் விமானப் படைத் தளம் லடாக் எல்லைக் கோட்டில் இருந்து 320 கி.மீ. தொலைவில் உள்ளது. லே நகரில் உள்ள இந்திய விமானப் படை தளம் எல்லைக் கோட்டில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் டவ்லத் பெக் ஓல்டியில் உள்ள சிறிய அளவிலான இந்திய விமானப் படை தளம் எல்லையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லடாக்கில் பணியாற்றும் ராணுவ மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் கூறும்போது, "நெருப்பு மற்றும் சீற்றம் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மலைப்பகுதியில் போரிடும் திறன் பெற்றவர்கள். எல்லைக்கோடு பகுதிக்கு வீரர்களையும் ஆயுத தளவாடங்களையும் எளிதில் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.
கதறி அழும் சீன வீரர்கள்
சில நாட்களுக்கு முன்பு சீன சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில் இந்திய எல்லைக்கு வாகனத்தில் அனுப்பப்பட்ட சீன வீரர்கள், ராணுவ கீதத்தை பாடுகின்றனர். ராணுவ கீதத்தை பாடும்போதே சீன வீரர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர். சிறிது நேரத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
எனினும் வீடியோ பதிவு உலகம் முழுவதும் பரவிவிட்டது. சர்வதேச ஊடகங்கள் சீன ராணுவத்தை கேலி, கிண்டல் செய்து வருகின்றன. இந்திய வீரர்களுக்கு பயந்து சீன வீரர்கள் கதறி அழுகின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதை மறுத்துள்ள சீன ராணுவம், குடும்பத்தைப் பிரிந்து எல்லைக்கு செல்வதால் சீன வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டுவிட்டனர் என்று மழுப்பலாக பதிலளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago