ரூ.60 ஆயிரம் கோடி செலவில் ராணுவத்துக்கு வாங்கிய ரஃபேல் விமானங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான உறுதியை அந்நிறுவனங்கள் இதுவரை வழங்கவில்லை என்று தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கை 2 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
பிரான்சின் விமான தயாரிப்பு நிறுவனமான தஸ்ஸோ ஏவியேஷன் மற்றும் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ ஆகியன இதுவரையில் போர் விமான தயாரிப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு உள்ளிட்டவை தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து உறுதி செய்யவில்லை. மொத்தம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ அமைச்சகம் தொழில்நுட்ப பரிமாற்றத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை என தெரிவித்ததாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறுமா என்பதை ராணுவ அமைச்சகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (டிஆர்டிஓ) ஆகியவைதான் கண்டறியவேண்டும். இதற்குரிய தொழில்நுட்பத்தை இவைதான் கண்டறிய வேண்டும் என தெரிகிறது. ராணுவ தளவாட மையத்தின் (டிஏசி) வழிகாட்டுதலின்படி இதை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தஸ்ஸோ விமான நிறுவனம் மற்றும் எம்பிடிஏ ஆகியன ஒப்பந்தத்தில் 30 சதவீதத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்டன. இதன்படி தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ-வுக்கு அளிக்க முன்வந்தன. ஒப்பந்தப்படி சப்ளை செய்யும் நிறுவனங்கள் அதற்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ-வுக்கு அளிக்க வேண்டும் என்பதாகும். இது சப்ளை செய்யும் நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ இடையிலான புரிதலின்படி மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரலில் டிஆர்டிஓ 6 புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களை கண்டறிந்தது. இவை அனைத்தும் சப்ளை செய்யும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய தொழில்நுட்பங்களாகும். இவற்றில் 5 தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்ய சப்ளை செய்த நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. 6-வது ஒப்பந்தமானது இலகு ரக விமான (காவேரி) தயாரிப்பு தொடர்பானது. ஆனால் இதற்கான தொழில்நுட்ப பரிமாற்றமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப பரிமாற்றத்தை சப்ளை செய்தபிறகு நிறைவேற்றுவதில்லை என சிஏஜி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சிஏஜி அறிக்கை ஏன் அவசியம்?
தலைமை கணக்கு தணிக்கைத் துறை (சிஏஜி) சுதந்திரமான அமைப்பாகும். இது அரசு மேற்கொள்ளும் செலவினங்களை தணிக்கை செய்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட அனைத்து அரசு செலவினங்களையும் தணிக்கை செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது இதன் பிரதான பணியாகும்.
அரசு செலவினங்கள் மட்டுமின்றி அரசுக்கு 51 சதவீதத்துக்கும் அதிகமான பங்குள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளையும் சிஏஜி தணிக்கை செய்யும் அதிகாரம் கொண்டது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை மட்டும் சிஏஜி தணிக்கை செய்யாது.
வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு கட்டாயம்
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.300 கோடிக்கு அதிகமான பொருட்களை வாங்குவதாய் இருந்தால் இதற்கான சிறப்பு விதி முறை 2005-ல் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு நிறுவனங்கள் மொத்த மதிப்பில் 30 சதவீத அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். 2016-ல் ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் செய்த போது 50 சதவீத அளவுக்கு முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய நிறுவனங்களான தஸ்ஸோ ஏவியேஷன், எம்பிடிஏ, சஃப்ரான் அண்ட் தாலேஸ் ஆகியவை இதற்கு முன்வந்தன.
இதற்காக தஸ்ஸோ நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. நாகபுரியில் உள்ள தொழிற்சாலையில் இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக உதிரி பாகங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி முதலாண்டு ஒப்பந்தம் செப்டம்பர் 23, 2020 நிறைவேற்றப்பட வேண்டும்.
கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு மார்ச் வரை 46 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.66,427 கோடி. இவற்றில் ரூ.19,223 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி கணக்கிட்டால் ஒப்புக்கொள்ளப்பட்ட பணி அளவில் 59 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை 6 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது மிகப்பெரும் சவாலானதாக இருக்கும் என சிஏஜி தெரிவித்துள்ளது.
மத்திய அரசிடம் செஸ் வருவாய் ரூ.1.1 லட்சம் கோடி உள்ளது
ஒருங்கிணைந்த நிதியத்துக்காக செஸ் வரி மூலம் திரட்டப்பட்ட நிதியை மத்திய அரசு அந்த நிதியத்துக்கு ஒதுக்கவில்லை. மொத்தம் வசூலான தொகை ரூ.2.75 லட்சம் கோடியாகும். இதில் ரூ. 1.1 லட்சம் கோடியை மத்திய அரசே வைத்துள்ளது.
எண்ணெய் தொகுப்பு நிதிக்காக கூடுதலாக செஸ் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக திரட்டப்பட்ட ரூ.1,24,399 கோடியை மத்திய அரசு அந்த நிதியத்துக்கு ஒதுக்கவில்லை.
இதேபோல மாநில அரசுகள் அதிகம் கோரிக்கை விடுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகைக்கான ஒதுக்கீடு ரூ.40,806 கோடி நிதியை கடந்த நிதி ஆண்டில் (2018-19) ஒதுக்கவில்லை.
இதேபோல ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) மூலம் திரட்டப்பட்ட தொகையில் மாநிலங்களுக்கு உரிய தொகை ஒதுக்கப்படவில்லை. ரூ.15,001 கோடி ஐஜிஎஸ்டி-யாக வசூலிக்கப்பட்டது. இது மாநில நிதியாக மொத்த வருவாயில் கணக்கிடப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய ஐஜிஎஸ்டி பங்கு அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் 35 வகைகளில் வசூலிக்கப்பட்ட செஸ் தொகை ரூ.2,74,592 கோடியாகும். இதில் ரூ.1,64,322 கோடி மட்டுமே இருப்பு நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago