பிஹார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிவதையடுத்து அங்கு தேர்தல் நடத்தும் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி பிஹாரில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், கரோனா வைரஸ், பிஹார் மாநிலத்தில் பெய்த மழை, அதனால் உருவான வெள்ளம் போன்றவற்றால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது. பிஹாரில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி ஆகியவை கரோனா வைரஸ் பரவல், மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதின.
ஆனால், பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கின. பிஹார் மாநிலத்துக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளைக் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். இதையடுத்து, பிஹாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பிஹார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 243 தொகுதிகள் மாநிலத்தில் உள்ளன. இதில் 38 தொகுதிகள் பட்டியலினப் பிரிவினருக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டில் 6.7 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 7.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. எங்கெல்லாம் இந்த வசதி தேவைப்படுகிறதோ அங்கு நீட்டிக்கப்படும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலனும் கருத்தில் கொள்ளப்படும்.
தபால் வாக்குகளைத் தவிர்த்து கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர், தனிமையில் இருப்போர், வாக்களிக்கும் நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து வாக்களிக்கலாம்.
கூடுதலாக ஒரு மணி நேரம்
வாக்களிக்கும் நேரம், கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும். இந்த முறை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின்போது பயன்பாட்டுக்காக 7 லட்சம் சானிடைசர்கள், 46 லட்சத்துக்கும் அதிகமான முகக்கவசங்கள், 6 லட்சம் பிபிஇ ஆடைகள், 6.7 லட்சம் ஃபேஷ் ஷீல்ட், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்காக 7.2 கோடி கையுறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் நடக்கும் அனைத்துக் கூட்டங்களையும் தேர்தல் அதிகாரிகளோடு சேர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளும் கண்காணிப்பார்கள்.
தேர்தல் பொதுக்கூட்டம்
பொதுமக்கள் கூட்டங்களில் கூடும்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு கூட்டத்துக்கு எத்தனை மக்கள் வர வேண்டும் என்பதை மாவட்டத் தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.
சமீபகாலமாக சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவது சவாலாக இருக்கிறது. சமூக வலைதளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
கடும் நடவடிக்கை
தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் தகவல்களைப் பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும்.
பிஹாரில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல்கட்டத் தேர்தல்
அக்டோபர் 1-ம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும். அக்.8-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவைத் திரும்பப் பெற 12-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
2-ம் கட்டத் தேர்தல்
2-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெறும். 2-ம் கட்டத்தில் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்படும்.
16-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 17-ம் தேதி வேட்புமனு பிரசீலனையும், 19-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.
3-ம் கட்ட வாக்குப் பதிவு
3-ம் கட்டத் தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி நடைபெறும். 20-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். 21-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 23-ம் தேதி மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.
3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டாலும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடக்கும்''.
இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago