மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும். குறைந்தபட்ச ஆதார விலையை அவர்களிடம் இருந்து பறித்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அதேசமயம் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து, பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நடத்தப்படும் பாரத் பந்த்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
3 வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் வரை மக்களவை, மாநிலங்களவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர்.
காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வேளாண் மசோதாக்களைத் திருப்பி அனுப்ப வேண்டும், கையொப்பமிடக் கூடாது என்று கூறி கோரி்க்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
விவசாயிகள் சார்பில் நடக்கும் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அடிப்படையில் குறைபாடு இடைய ஜிஎஸ்டி வரி நடுத்தர, சிறு, குறு நிறுவனங்களை அழித்தது. புதிய வேளாண் சட்டங்கள், நம்முடைய விவசாயிகளை அடிமையாக்கிவிடும். பாரத் பந்த்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும், ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் இருக்கிறது.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அவர்களிடம் இருந்து பறிக்கப்படும். அவர்கள் கோடீஸ்வரர்களிடம் ஒப்பந்த விவசாயம் மூலம் வலுக்கட்டாயமாக அடிமைகளாக்கப்படுவார்கள்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விலையும் கிடைக்காது, மரியாதையும் இருக்காது. விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே தொழிலாளியாக்கப்படுவார்கள். இந்த அநீதி விவசாயிகளுக்கு நடக்க அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ விவசாயிகள் பாரத் பந்த் நடத்தி வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வருகிறது. மோடி அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துகிறது.
எங்கு பார்த்தாலும் குழப்பம் நீடிக்கிறது. விவசாயிகளிடம் ஒருபுறம் மோடி வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், தன்னுடய முதலாளித்துவ நண்பர்களுக்காகவே உண்மையாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியும், விவசாயிகளும் ஒன்றாகப் போராடுவார்கள். முதலாளித்துவ நண்பர்களிடம் விவசாயிகளையும், வேளாண்மையையும் அடமானம் வைக்க மோடி அரசை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago