மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அணையில் சேமிக்கப்படும் நீரை பெங்களூரு நகரத்துக்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வழங்க அணை கட்டப்படுகிறது. அதேமயம், வழக்கமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்கப்படும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்குவதில் எந்தத் தடையும் இந்த அணை கட்டுவதால் வராது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா டெல்லியில் கடந்த வெள்ளிக்கழமை சந்தித்தார். அப்போது, காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகேதாட்டு அணைக்கு விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று எடியூரப்பா பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது எனக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று (செப். 22) புதுடெல்லியில் நேரில் சந்தித்தனர்.
அப்போது மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மோடியிடம் வழங்கினர்.
அப்போது நடந்த சந்திப்புக் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:
“மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியைச் சந்தித்து திமுக எம்.பி.க்கள் குழுவினர் வழங்கினோம்.
அப்போது மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த அநீதியும் இழைக்க நான் அனுமதிக்க மாட்டேன். மாநிலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி எங்களிடம் உறுதியளித்தார்.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகளை பிரமதர் மோடியிடம் விரிவாகக் கூறினோம். காவிரியின் குறுக்கே அணை கட்டுவது என்பது காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கு விரோதமானது. மேலும், இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதையும் தெரிவித்தோம்.
கர்நாடக முதல்வர் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அவரின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும்கூட, அணை கட்டப்படக்கூடாது என்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எந்தவிதமான கடித்ததையும் எழுதவில்லை, அவரைச் சந்திக்கவும் முயலவில்லை.
எங்களின் தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வரின் மனப்போக்கைக் கண்டு வேதனை அடைந்து, இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
காவிரித் தீர்ப்பாயத்துக்கு எதிராக கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்ட முயல்கிறது. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் சந்தித்து இது தொடர்பாகப் பேசியது இறுதித் தீர்ப்பை கேலிக்கூத்தாக்குவதுபோல் இருக்கிறது.
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன பதில் கூற என்று பிரதமர் மோடியிடம் கேட்டோம். அதற்குப் பிரதமர் மோடி தெளிவாக, தமிழகத்துக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏராளமான அணை கட்டும் திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்தால், திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளபடி, வேளாண் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்க்கப்படும். ஏரிகளின் கொள்ளவு அதிகரிக்கப்படும், விவசாயிகளுக்கு எளிதாகப் பாசன வசதி கிடைக்க உதவி செய்யப்படும்''.
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago