எம்.பி.க்களுக்கு அதிகரிக்கும் கரோனா தொற்று: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அக்.1-ம் தேதிக்கு முன்பே முடிக்க மத்திய அரசு திட்டம்?

By பிடிஐ

கரோனா வைரஸால் எம்.பி.க்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பே முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இன்று மாலை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசி ஆலோசித்தபின் முடிவு அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் விடுமுறையின்றி அக்டோபர் 1-ம் தேதிவரை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை நேரத்தில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் கூட முடிவு செய்யப்பட்டது.

நாடாளமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். நாடாளுமன்றப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கடும் கட்டுப்பாடுகளுக்குப் பின்பே நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்திலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் எம்.பி.க்களுக்கு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும் எம்.பி.க்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பிரகலாத் படேல் ஆகிய இருவரும் கூட்டத் தொடரில் பங்கேற்றபின் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து எம்.பி.க்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால், 18 நாட்கள் கூட்டத்தொடரைத் தொடர்ந்து நடத்துவது ஆபத்தானது என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்களைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கத் தொடங்கி முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக இன்று மாலை மக்களவையின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதற்கு மாற்றாக மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றவில்லை என்றால், அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும்.

இதுவரை 2 வேளாண் மசோதாக்கள் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு மசோதா, எம்.பி.க்கள் ஊதியத்தைக் குறைப்பது தொடர்பான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த முடிவும் எடுக்கும்முன் இந்த 11 அவசரச் சட்டங்களுக்கும் மசோதாக்களை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்