தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியில் இருந்து மூவரும் சிறை தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்களின் தண்டனை காலம் ஓரிரு மாதங்களில் முடிகிறது.
இந்நிலையில், சசிகலா ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த தவறினால், 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்று பெங்களூரு மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லதா தெரிவித்துள்ளார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் ரூ.10 கோடி அபராதத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
என்ன நடைமுறை?
சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரப்பன அக்ரஹார மத்திய சிறை கண்காணிப்பாளரை சந்தித்து, அபராதத் தொகையை செலுத்துவதற்கான நடைமுறை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, ‘‘சசிகலாவை சிறையில் அடைப்பதற்கான தண்டனை
ஆணையைநீதிமன்றம் வழங்கிய போதே, அபராதத் தொகையை வசூலிக்கும் அதிகாரத்தை சிறைக்கு வழங்கியுள்ளது. அபராதத் தொகைக்கான வரைவோலையை எடுத்து சிறையில் கூட நேரடியாக செலுத்தலாம். நீதிமன்றம் மூலமாகவும் செலுத்தலாம்'' என்று சிறை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அதேபோல், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற பதிவாளர் தரப்பிலும், ‘‘சசிகலா அபராதத் தொகையை செலுத்துவதற்கான அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நினைவூட்டல் (மெமோ) தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் ரூ.10 கோடிக்கான வரைவோலை எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் நீதிமன்ற ஆணை சிறைக்கு அனுப்பப்படும். அதன்பின், சிறை நிர்வாகம் விடுதலைக்கான தேதியை முடிவு செய்யும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகங்களில் சுதாகரன் தனது ரூ.10 கோடி அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சசிகலாவும் அபராதத்தை செலுத்த மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மறுத்துள்ளார்.