‘‘மொழி என்பது கருவிதான்; அதுவே கல்வியாகாது’’- பிரதமர் மோடி விளக்கம்  

By செய்திப்பிரிவு

மொழி என்பது கல்விக்கான ஒரு கருவிதானே தவிர அது மட்டுமே கல்வி ஆகிவிடாது என பிரதமர் மோடி கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் ``21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி'' என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

இந்தியாவின் 21வது நூற்றாண்டுக்குப் புதிய திசையைக் காட்டுவதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த மூன்று தசாப்த காலங்களில் நமது செயல்பாடுகளில் எதுவுமே பழைய நிலையிலேயே இல்லாமல் மாறியுள்ளன என்ற நிலையில், நமது கல்வித் திட்டம் மட்டும் பழைய நடைமுறையிலேயே இருக்கிறது என்றார் அவர்.

புதிய உயர்நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், புதிய இந்தியாவில் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று அவர் கூறினார்.

நாட்டின் அனைத்துப் பிராந்தியங்கள், அனைத்து தரப்பினர் மற்றும் அனைத்து மொழியினருடன் கடந்த 3 முதல் 4 ஆண்டு காலம் வரையில் தீவிரமாக ஆலோசித்து கடின உழைப்பின் பேரில் தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கொள்கையை அமல்படுத்த வேண்டிய, உண்மையான செயல்பாடு இப்போது தான் தொடங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய கல்விக் கொள்கையை செம்மையாக அமல்படுத்த ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கொள்கை அறிவிப்பு வெளியான பிறகு நிறைய கேள்விகள் எழுவது நியாயம் தான் என்று கூறிய அவர், அந்த அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதங்கள் நடத்தி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதற்கான இந்த கலந்துரையாடலில் கல்வி நிலையங்களின் முதல்வர்களும், ஆசிரியர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர்களிடம் இருந்து 1.5 மில்லியன் ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, சக்திமிகுந்த என்ஜின்களாக இளைஞர்கள் தான் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களின் வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். குழந்தைகளுக்கான கல்வி, அவர்களுக்கு உகந்த சூழல் அமைவது ஆகியவை தான் அவர்களுடைய எதிர்காலம் எப்படி அமையும் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும், அதைப் பொருத்துதான் அவர்களின் ஆளுமைத் திறன் அமையும் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கையில் இந்த அம்சங்களுக்கு நிறைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் தான் பிள்ளைகளுக்கு உணர்வுகள், திறன்கள் புரியத் தொடங்குகின்றன. எனவே, விளையாட்டு முறையில் கல்வி கற்பது, செயல்பாட்டுடன் கூடிய கற்றல், புதிதாகக் கண்டறியும் சிந்தனையைத் தூண்டும் வகையிலான கல்வி முறைக்கு ஆசிரியர்களும் பள்ளிக்கூடங்களும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர் கூறினார். குழந்தைகள் வளரும்போது, கற்றலுக்கான உந்துதலை வளர்ப்பது, அறிவியல்பூர்வ மற்றும் தத்துவார்த்த ரீதியிலான சிந்தனை, கணித அடிப்படையிலான சிந்தனை, அறிவியல் விஷயங்களை அறிதல் போன்றவற்றை வளர்ப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில், பழைய 10 பிளஸ் 2 என்ற கல்வித் திட்டத்திற்குப் பதிலாக 5 பிளஸ் 3 பிளஸ் 3 பிளஸ் 4 என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார் அவர். தற்போது நகரங்களில் தனியார் பள்ளிகளில் மட்டும் உள்ள விளையாட்டு முறையிலான கற்றல் வசதி, புதிய கொள்கை அமலுக்கு வந்ததும் எல்லா கிராமங்களிலும் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.

அடிப்படைக் கல்வியில் கவனம் செலுத்துவது என்பது தான் இந்தக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம். இதன் கீழ், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவை தேசிய அளவிலான லட்சியத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்படும். குழந்தைகள் முன்வந்து படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு, ஆரம்பத்தில் அவர்கள் படிக்கக் கற்றுக் கொள்வது அவசியம். படிப்பதற்குக் கற்பது, கற்பதற்குப் படிப்பது என்ற வளர்ச்சிக்கான பயணம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்தின் மூலம் முழுமை பெறும் என்று பிரதமர் கூறினார்.

3வது கிரேடு முடிக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு நிமிடத்தில் 30 முதல் 35 வார்த்தைகளை எளிதாகப் படிக்கும் தகுதியைப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிலையை எட்டிவிட்டால், மற்ற பாடங்களில் உள்ள விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிடும் என்றார் அவர். உண்மையான உலக நடப்புகளுடன், நமது வாழ்வுடன் மற்றும் சுற்றுப்புற சூழலுடன் தொடர்புடையதாக நமது கல்வி இருந்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும்.

சுற்றுச்சூழலுடன் தொடர்புடையதாக கல்வி அமையும்போது, மாணவரின் வாழ்வில் அது தாக்கத்தை ஏற்படுத்தும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார். தாம் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சி பற்றி அவர் குறிப்பிட்டார். கிராமத்தில் உள்ள மிகவும் பழைய மரத்தின் பெயரை அறிந்து சொல்லும்படி அனைத்துப் பள்ளிக்கூடங்களின் மாணவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிறகு அந்த மரம் பற்றியும் அவர்களுடைய கிராமம் பற்றியும் ஒரு கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. மாணவர்கள் சுற்றுச்சூழலைப் பற்றி அறிந்து கொண்டனர் என்பதுடன், தங்கள் கிராமத்தைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொண்டனர் என்று பிரதமர் கூறினார்.

அதுபோன்ற எளிமையான மற்றும் புதுமை சிந்தனையுடன் கூடிய பயிற்சிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். புதிய யுகத்தில் கற்றலின் முக்கிய அம்சங்களாக - பங்கேற்பு, ஆய்வு செய்திடு, அனுபவித்திடு, விவரித்திடு, செம்மை அடைந்திடு - என்ற அம்சங்கள் தான் மையமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ற செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் கல்வி செயல் திட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறினார். மாணவர்கள் ஆக்கபூர்வமான வழியில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறார்கள் என்றார் அவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஆர்வத்தை ஏற்படுத்தும் இடங்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட வேண்டும், அவைதான் நடைமுறை அறிவை வழங்குவதாக இருக்கும் என்று அவர் கூறினார். இப்போது எல்லா பள்ளிக்கூடங்களிலும் கல்விச் சுற்றுலா நடத்தப்படுவதில்லை என்று கூறிய அவர், அதனால் பல மாணவர்களுக்கு நடைமுறை அறிவு கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார். நடைமுறை அறிவைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்போது, அவர்களுடைய ஆர்வம் பெருகி, அறிவும் பெரும் என்று பிரதமர் கூறினார். தொழில் திறன் பெற்றவர்களை வெளியில் மாணவர்கள் பார்க்கும்போது, உணர்வுப்பூர்வமான இணைப்பு ஏற்படும். தொழில் திறன்களை மாணவர்கள் புரிந்து கொண்டு, அவர்களை மதிப்பார்கள் என்று அவர் கூறினார். இந்த மாணவர்களில் பலர் வளர்ந்து இதுபோன்ற தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேரலாம் அல்லது வேறு தொழிலுக்குச் சென்றாலும், அந்தத் தொழிலை எப்படி மேம்படுத்தலாம் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும் என்று அவர் கூறினார்.

பாடத் திட்டத்தை குறைத்துக் கொண்டு, அடிப்படை அம்சங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கற்றலை ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை சார்ந்ததாக, விளையாட்டு அடிப்படையிலான மற்றும் முழுமையான அனுபவத்தைத் தரும் வகையில் தேசிய பாடத்திட்ட வரையறை உருவாக்கப்படும் என்றார் பிரதமர். இதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டு, பரிந்துரைகளும் நவீன கல்வி நடைமுறைகளும் அதில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் உருவாகப் போகும் உலகம், இப்போது நாம் வாழும் உலகில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்றார் அவர்.

நமது மாணவர்களை 21வது நூற்றாண்டு திறன்களுக்கு அழைத்துச் செல்வது தான் இந்தக் கொள்கையின் முக்கியமான அம்சம் என்று பிரதமர் கூறினார். ஆழ்ந்து சிந்தித்தல், புதுமையான சிந்தனை, கூட்டு முயற்சி, அறிதலின் ஆர்வம், தகவல் தொடர்பு ஆகியவை தான் 21வது நூற்றாண்டின் திறன்களாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே கம்ப்யூட்டர் குறியீடுகள் எழுதுவதைக் கற்க வேண்டும், செயற்கைப் புலனறிதலைப் புரிந்து கொள்ள வேண்டும், இன்டர்நெட் செயல்பாடுகளில் இணைதல் வேண்டும், கிளவுட் கம்ப்யூட்டிங், தகவல் தொகுப்பு அறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றைக் கற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நமது முந்தைய கல்விக் கொள்கை, மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருந்தது. ஆனால் யதார்த்த உலகில், எல்லா துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக உள்ளன. துறையை மாற்றிக் கொள்ளவோ, புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கோ இப்போதைய நடைமுறையில் வசதிகள் இல்லை. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இடையில் கல்வியைக் கைவிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. எனவே, எந்தவொரு துறையையும் தேர்வு செய்யும் சுதந்திரத்தை தேசிய கல்விக் கொள்கை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

மதிப்பெண் பட்டியல் அடிப்படையிலான கல்விக்குப் பதிலாக, கற்றல் அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெரியதொரு மாற்றத்தை இந்தக் கொள்கை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். மதிப்பெண் பட்டியல் என்பது மன அழுத்தம் ஏற்படுத்தும் பட்டியல் என்பது போல இப்போது உள்ளது. இந்த அழுத்தத்தை நீக்க வேண்டும் என்பதும் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படுத்தாத வகையில் அவர்களுடைய கற்றல் நிலையை மதிப்பிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தேர்வின் மூலமாக மட்டுமின்றி, தனி மதிப்பீடு, செயல்பாட்டு மதிப்பீடு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாணவரின் கற்றல் நிலை மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றார் அவர். மதிப்பெண் பட்டியலுக்குப் பதிலாக, முழுமையான ஒரு அறிக்கை தரப்படும். அதில் தனித்துவமான திறன், கற்றல் ஆர்வம், செயல்பாடு, திறமை, திறன்கள், சிறப்பாக செயல்படுத்துதல், போட்டிகளை எதிர்கொள்ளும் தன்மை மற்றும் அடுத்தகட்ட வாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் பற்றிய தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். மதிப்பீடு நடைமுறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கு ``பராக்'' என்ற தேசிய மதிப்பீட்டு மையம் புதிதாக உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மொழி என்பது கல்விக்கான ஒரு கருவிதானே தவிர, அது மட்டுமே கல்வி ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். சிலர் இந்த வித்தியாசத்தை மறந்துவிடுகிறார்கள். எனவே, மாணவர்கள் எளிதாக என்னென்ன மொழிகளைக் கற்க முடியுமோ, அவை தான் கற்றலுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு, பெரும்பாலான மற்ற நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாவிலும் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் இருக்கும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. இல்லாவிட்டால், வேறு மொழியில் குழந்தைகள் எதையாவது கேட்டால், முதலில் தங்கள் மொழிக்கு மொழி பெயர்த்து, அதைப் புரிந்து கொள்வார்கள். இது குழந்தையின் மனதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே முடிந்த வரையில், உள்ளூர் மொழி, தாய் மொழி, கற்றல் மொழி ஆகியவை குறைந்தபட்சம் 5வது கிரேடு வரையில் பின்பற்றப்பட வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது என்றார் அவர்.

தாய்மொழி அல்லாத வேறு மொழியை கற்றல் மற்றும் கற்பித்தலில் தேசிய கல்விக் கொள்கையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன என்று பிரதமர் கூறினார். வெளிநாடுகளில் ஆங்கிலத்துடன், வெளிநாட்டு மொழியும் உதவிகரமாக இருக்கும் என்றாலும், அவற்றை குழந்தைகள் படிப்பதும், கற்பதும் நல்லதாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கு, அனைத்து இந்திய மொழிகளும் நமது இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கையின் இந்தப் பயணத்தில் ஆசிரியர்கள் தான் முன்னோடிகளாக இருக்கப் போகிறார்கள். எனவே, ஏற்கெனவே கற்ற விஷயங்களை மறந்துவிட்டு, புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 2022ல் நாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவுபெறும்போது, தேசிய கல்விக் கொள்கையின் தகுதிநிலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் எல்லா மாணவர்களும் படிக்கும் திறனை உருவாக்கும் கூட்டுப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது. இந்த தேசிய லட்சிய நோக்கு முயற்சியில் ஆசிரியர்கள், நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்