21 நாட்களில் நாட்டிலிருந்து கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், 21 நாட்களில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் அமைப்புசாரா துறையை நொறுக்கிவிட்டார். லாக்டவுன் ஆனது கரோனா மீதான தாக்குதல் அல்ல, ஏழைகள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியானபின், மத்திய அரசை விமர்சிக்கும் வேகத்தை ராகுல் காந்தி வேகப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தைத் தெரிந்து கொள்வோம் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு, மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதைக் கடுமையாக ராகுல் காந்தி சாடி வருகிறார். இதுவரை 3 வீடியோக்களை ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில் இன்று 4-வது வீடியோவவை ட்விட்டரில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியிருப்பதாவது:
''நாட்டில் 21 நாட்கள் லாக்டவுனை அமல்படுத்தினால் கரோனா ஒழிந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், 21 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் அமைப்புசாரா துறையை அழித்துவிட்டார்.
லாக்டவுன் என்பது கரோனா வைரஸ் மீதான தாக்குதல் அல்ல. அது ஏழை மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். எதிர்கால இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
லாக்டவுன் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மீதான தாக்குதல். நம்முடைய அமைப்புசாரா தொழில்கள், துறைகள் மீதான தாக்குதல். இதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
என்ன வேண்டுமானாலும் கரோனாவின் பெயரைச் சொல்லி செய்துவிட்டார்கள். அமைப்புசாரா துறையின் மீது நடத்தப்பட்ட 3-வது தாக்குதல். அறிவிக்கப்படாமல் திடீரென கொண்டுவரப்பட்ட லாக்டவுன் என்பது அமைப்புசாரா துறையில் உள்ள மக்களுக்கான மரண தண்டனை.
21 நாட்களில் கரோனாவை அழித்துவிடுவேன் என்று கூறிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் சிறு தொழில்களையும் அழித்துவிட்டார். இந்த வீடியோவைப் பாருங்கள். மோடியின் மக்களுக்கு எதிரான அழிவுத் திட்டத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.
ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்கள், தினக்கூலிகள் ஆகியோர் நாள்தோறும் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் ஊதியத்தில்தான் நாள்தோறும் சாப்பிடுகிறார்கள். ஆனால், முன்னறிவிப்பின்றி, திடீரென லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கியபின், ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் எனப் பலமுறை காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியது.
நியாய் போன்ற திட்டங்கள் மூலம் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே பணத்தை டெபாசிட் செய்யுங்கள் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், மத்திய அரசு அதைச் செய்யவில்லை.
சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான உதவித் திட்டங்களைத் தயார் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினோம். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றோம். பணம் இல்லாமல் அவர்களால் பொருளாதாரத்தில் நிலைத்திருக்க முடியாது. ஆனால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
ஆனால், அதற்கு மாறாக, 15 முதல் 20 தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கான கோடி மதிப்பில் வரியைத் தள்ளுபடி செய்தது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago