புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை நிறுத்தி பிறப்பித்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுங்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, புதிய பதவிகளை உருவாக்குவது போன்றவற்றை நிறுத்திவைத்து மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், வேலையின்மை அதிகரித்துள்ள இந்த நேரத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கும் விடுத்த சுற்றறிக்கையில், புதிதாக எந்த வேலைவாய்ப்புகளும், பதவிகளும் உருவாக்குவதை, நியமிப்பதை பரிசீலனை செய்யுங்கள், செலவினத்துறையின் ஒப்புதலின்றி புதிதாக எந்தப் பதவியும் உருவாக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.

கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையிலும், செலவுகளை முறைப்படுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “குறைந்த நிர்வாகம், அதிகமான தனியார்மயம் என்பதைத்தான் மோடி அரசு சிந்தித்து வருகிறது.

கரோனா காலத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுப் பணிகளில் ஊழியர்களை நிரந்தரம் செய்ய மறுக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடி, தன்னுடைய நண்பர்களுக்கு மோடி அரசு உதவுகிறது. மக்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

எங்களின் மாற்று எண்ணங்களை, மாற்றுக் கருத்துகளை அடக்கலாம். ஆனால், குரல்களை ஒடுக்க முடியாது. இந்த உலகிற்கு எங்களின் எண்ணங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீவ் சுக்லா அளித்த பேட்டியில், “மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்துத் துறைகளும் புதிதாக எந்தப் பதவியும் உருவாக்கக் கூடாது, காலியாக இருக்கும் இடங்களில் புதிய வேலைவாய்ப்புகளால் நிரப்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்துவரும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை மறுப்பது என்பது அச்சுறுத்தலான சூழல். நம்முடைய நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புக்கு மக்களைத் தேர்ந்தெடுக்க மறுத்தால், இளைஞர்களுக்கு உதவி செய்ய மறுத்தால், யார் அவர்களுக்கு ஆதரவு தருவது?

தனியார் துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கெனவே பணநீக்கம் செய்து வருகின்றன. அவர்களின் நிதி நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஆதலால், அரசின் அனைத்துத் துறைகளிலும் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களுக்கு உதவ வேண்டும். காலியாக இருக்கும் பதவியிடங்களை உடனடியாக நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்பபுகளை உருவாக்குவோம் என்று கூறியது. ஆனால், கடந்த சில மாதங்களில் 2 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE