''பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழைகள், சிறு வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: தேசமே வங்கி வாசலில் நின்றது''- மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

By பிடிஐ

பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஒட்டுமொத்த தேசத்தையும் வங்கி வாசலில் நிறுத்தப்பட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழச்சி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின், மத்திய அரசை விமர்சிக்கும் வேகத்தை ராகுல் காந்தி வேகப்படுத்தியுள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் பொருளாதாரத்தைத் தெரிந்து கொள்வோம் என்ற பெயரில் 4 நிமிட வீடியோ வெளியிட்டு, மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதைக் கடுமையாக ராகுல் காந்தி சாடினார்.

இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மோடி அரசு எவ்வாறு அழித்தது என்ற தலைப்பில் அடுத்த வீடியோவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது:

''பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, குறைந்த பணப் பரிவர்த்தனை திட்டம் என்பது உண்மையில், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம்.

அனைவரையும் அச்சுறுத்தும் பகடைகள் கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி உருட்டப்பட்டது. அதன் விளைவுகள், 2020,ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியானது. (பொருளாதாரச் சரிவு குறித்த அறிக்கை)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மறைந்திருக்கும் நோக்கம் என்பது, அமைப்பு சாராத் தொழில்களில் இருந்து பணத்தை எடுத்து, கார்ப்பரேட் முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாகும்.

2016 ,நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்புக்குப் பின் ஒட்டுமொத்த தேசமே வங்கியின் வாசலில் வரிசையில் நின்றது.

இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பலன்?, கறுப்புப் பணம் இருந்ததா? இல்லை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளுக்கு என்ன பலன் கிடைத்தது? ஒன்றும் கிடைக்கவில்லை.

அப்படியென்றால் பண மதிப்பிழப்பால் யார் பயன் அடைந்தது? தொழிலதிபர்கள் மட்டும்தான் பயன் பெற்றார்கள். உங்களின் கைகளில், வீடுகளில் வைத்திருந்த பணம் அனைத்தும், சில முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்யப் பயன்படுத்தப்பட்டது. குறித்துக்கொள்ளுங்கள், பாஜக அரசின் இலக்குகளில் இந்த நடவடிக்கையும் ஒன்று.

இரண்டாவது இலக்கு என்பது, நாட்டிலிருந்து ரொக்கப் பண முறையை ஒழிக்க வேண்டும். நம்முடைய அமைப்புசாராதுறை, அமைப்புசாரா பொருளாதாரம் ரொக்கப் பணத்தால்தான் இயங்குகிறது.

சிறு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் ரொக்கப் பணத்தில்தான் புழங்குகின்றனர்.
நாட்டில் ரொக்கப் பணம் இல்லாத நிலையைக் கொண்டுவர பிரதமர் மோடி விரும்பினார். ரொக்கப் பணம் இல்லாத நாடாக இந்தியா மாறினால், அமைப்புசாரா துறை அழிந்துவிடும்.

ரொக்கப் பணப் பரிவர்த்தனையை நம்பியிருந்த சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் , விவசாயிகள் அனைவரும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஏழைகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அமைப்புசாரா தொழில் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதைப் புரிந்துகொண்டபின், தேசம் முழுவதும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்