மே. வங்கத்தில் 75 சதவீதம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதவில்லை; மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

By பிடிஐ

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 1-ம் தேதி நடந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளை 75 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை. மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ மெயின், நீட் நுழைவுத் தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்வுகளை நடத்த அனுமதியளித்தது. கடந்த 1-ம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் நடந்தன, வரும் 13-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும், கரோனாவல் பாதிப்பு ஓய்ந்தவுடன் நடத்தலாம் என மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மம்தா கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல மாணவர்கள் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வை எழுதவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் மாநில மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுகளை எழுத முடியாமல் பெரிய சிரமத்துக்கு ஆளாகினார்கள். கரோனா வைரஸ் பரவலால், 75 சதவீத மாணவர்கள் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகளை எழுதமுடியவில்லை.

அதனால்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கூறுங்கள், மாணவர்கள் எந்த இழப்பும் அடையமாட்டார்கள், என நான் தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டேன்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 4,652 மாணவர்கள் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆனால், 1,167 மாணவர்கள் மட்டுமே எழுதினார்கள். தேர்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்தபோதிலும் மாணவர்கள் கரோனா அச்சம் காரணமாக வரவில்லை. 25 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர், 75 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

நான் பலமுறை மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டும் அவர்கள் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருந்தார்கள். கரோனா வைரஸ் காரணமாக, தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது. இன்னும் சில நாட்கள் இந்த நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைப்பதால், என்ன தவறு நடந்துவிடப் போகிறது.

எதற்காக மத்திய அரசு இப்படி அகங்காரத்துடன் இருக்கிறது. ஏன் மத்தியஅரசு இவ்வளவு பிடிவாதத்துடன் நடந்து கொள்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்க யார் அனுமதியளித்தது.
மாணவர்கள் தேர்வு எழுத்த மாட்டோம் எனச் சொல்லவில்லை. தேர்வுகள் நடத்தும் தேதிகளை மாற்றி வையுங்கள் என்று கரோனா வைரஸ் காலத்தில் அவர்களின் உடல்நிலையைக் காரணம்காட்டித்தான் கேட்டார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதற்கிடையே ஜேஇஇ தேர்வுகளை எழுதிய மாணவர்கள் பலரும் தேர்வு மையத்துக்கு வருவதற்கு ஏராளமான செலவுகளைச் செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மால்டா மாவட்டத்திலிருந்து கொல்கத்தா வருவதற்காக 365 கி.மீ தொலைவுக்கு தனியாக கால்டாக்ஸி பிடித்து ரூ.25 ஆயிரம் செலவு செய்து ஒரு மாணவர் தேர்வு எழுதியுள்ளார். இதை மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவி கூட்டம் நிறைந்த பேருந்தில் கரோனா காலத்தில் பயணிக்க அச்சப்பட்டு சொகுசுபேருந்தில் ரூ.800 கட்டணம் செலுத்தி மால்டாவிலிருந்து கொல்கத்தாவுக்கு வந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்