“இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்தப் பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையைப் பெறுகிறோம். பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களைப் பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.
மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்துவரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.
மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்குச் சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.”
இந்தியாவின் அடையாளத்தை கூறும் இந்த வார்த்தைகள் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியால் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசப்பட்டவை.
தேசத்தின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் இன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, தட்டச்சராக, ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி அரசியலுக்குள் நுழைந்து பல்வேறு பதவிகளை வகித்து 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் கோலோச்சியவர் பிரணாப் முகர்ஜி.
இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர், ராஜீவ் காந்தியால் வெறுக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டவர், சோனியா காந்தியின் அரசியல் வாழ்வை செதுக்கியவர், மதிக்கப்பட்டவர், ஆர்எஸ்எஸ் அமைப்பால் புகழப்பட்டவர் என பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் பிரணாப் முகர்ஜி.
திறமைசாலி, ராஜதந்திரி, பேரம்பேசுவதிலும், சமாதானம் பேசுவதிலும் வல்லவர்,அறிவாளி என்றெல்லாம் பிரணாப் முகர்ஜி புகழப்பட்டாலும், அரசியல் எனும் பரமபதம் அனைவருக்கும் எப்போதும் ஏணியை வழங்குவதில்லை, சில நேரங்களில் பாம்புக்கடிகளும் இருக்கும்.
அதுபோல் பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்விலும் சறுக்கல் பின்னடைவு, பாம்புக்கடியும் இருந்தன. அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும் சூழல்கூட இருந்தது. ஆனால், அனைத்தையும் மீறி மேலே வந்தவர்தான் பிரணாப் முகர்ஜி.
பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என அனைவராலும் மதிப்பிடப்பட்ட பிரணாப் முகர்ஜி கடைசிவரை பிரதமராகவில்லை, மாறாக குடியரசுத் தலைவர் பதவியோடு அவரின் அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக மன்மோகன் சிங்கை நியமித்தவரே பிரணாப் முகர்ஜிதான்.
ஆனால், மன்மோகன் சிங், நிதியமைச்சராகி, இரு முறை பிரதமராகினார். ஆனால், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என அரசியல்வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும்பேசப்பட்ட பிரணாப் முகர்ஜியால் கடைசிவரை பிரதமராக முடியவில்லை.
மே.வங்க மாநிலம்
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் மிராடி கிராமத்தில் 1935-ம் ஆண்டு டிசம்பர் 11-ம்தேதி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் பிரணாப் குமார் முகர்ஜி. பிரணாப் முகர்ஜியின் தந்தை கமாடா கின்கர் முகர்ஜி , தாய் ராஜலட்சுமி முகர்ஜி.
பிரணாப்பின் தந்தை கின்கர் தீவிரமான காங்கிரஸ் தொண்டர், சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். 1952 முதல் 1964வரை மேற்கு வங்க மேலவை உறுப்பினராக இருந்தவர்.
தந்தையின் அரசியலில் அனுபவத்திலிருந்து பாடம் கற்பதற்கு பதிலாக அரசியலையே பாடமாக எடுத்து பிரணாப் முகர்ஜி பயின்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சூரி நகரில் உள்ள சூரி வித்யாசாகர் கல்லூரியில் எம்.ஏ. அரசியல் அறிவியல், வரலாறு பட்டமும் அதன்பின் எல்எல்பி பட்டத்தையும் பிரணாப் பெற்றார்.
தட்டச்சர் பணி
தந்தை தீவிரமான அரசியல் தலைவராக இருந்தபோதிலும் பிரணாப்புக்கு அரசியலுக்கு செல்ல நாட்டமில்லாமல் தனது வாழ்க்கையை தபால்அலுவலகத்தில் எழுத்தராகத் தொடங்கினார்.
அரசியலுக்கு முழுமையாக நுழையும் முன்பு, 1963-ம் ஆண்டில் வி்த்யாநகர் கல்லூரியில் துணை பேராசிரியராக பிரணாப் முகர்ஜி சிறிது காலம் பணியாற்றினார்.
அதன்பின் பத்திரிகை பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தேஷர் தாக்(தாயகத்தின் குரல்) என்ற பத்திரிகையில் பிரணாப் பணியாற்றினார். இதன்பின்புதான் பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் ஆர்வம், ஆசை துளிர்வி்ட்டது.
இளமை அரசியல்
1969-ம் ஆண்டுதான் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அரசியல் வாழ்க்கை அப்போதுதான் தொடங்கியது. மிட்னாப்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வி.கே. கிருஷ்ணன் மேனனுக்கு தேர்தல் பிரச்சாரத்தை பிரணாப் முகர்ஜி சுறுசுறுப்புடனும், வித்தியாசமாகவும் செய்து வெற்றி பெறச் செய்தது காங்கிரஸ் கட்சியின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தைப் பெற்றார் பிரணாப் முகர்ஜி. பிரணாப் முகர்ஜியின் கல்விப் பின்புலம், அறிவாற்றல், திறமை ஆகியவற்றை கேட்டறிந்த இந்திரா காந்தி, அவரை காங்கிரஸ் கட்சியோடு அரவணைத்துக் கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் பிரணாப்புக்கு இன்ப அதிர்ச்சி அளி்க்கும் வகையில் 1969-ம் ஆண்டு அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியும் இந்திரா காந்தி அளித்தார்.
அதன்பின் இந்திரா காந்தியின் தீவிர விசுவாசியாகவும், போர்ப்படைத் தளபதிகளில் முக்கியமானவராகவும் பிரணாப் முகர்ஜி இருந்து வந்தார். நாடாளுமன்றத்தில் பேசும் போதும், பட்ஜெட் விவாதங்களில் பங்கேற்கும் போதும் எதையும் புள்ளிவிவரங்களோடும், விளக்கமாவும் பிரணாப் பேசுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
எம்.பி.யாக மட்டுமே இருந்த பிரணாப் முகர்ஜிக்கு இந்திரா காந்தி இன்பஅதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார். ஆம் 1973-ம் ஆண்டு தொழில்துறை மேம்பாட்டு இணையமைச்சர் பொறுப்பையும், கப்பல்,பின்னர் தரைவழிப்போக்குவரத்து துணை அமைச்சர் பதவியையும் பிரணாப்புக்கு இந்திரா வழங்கினார்.
நிதிஅமைச்சர்
அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்துக்கும் இந்திரா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் சுப்பிரமணியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவர் வசம் இருந்த ஆயத்தீர்வை, வருமானவரி, தொழிவளர்ச்சி, வங்கிக்கொள்கை ஆகிய துறைகளை பிரித்து பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்து அவரை நிதித்துறை இணையமைச்சராக நியமித்தார் இந்திரா காந்தி.
அதுவரை மத்திய அமைச்சராக பார்க்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும், அதிகாரம் மிக்கவராகவும் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்திலும் வலம்வரத் தொடங்கினார்.
ஷா கமிஷன் குற்றச்சாட்டு
நாட்டில் (1975-77)அவசரநிலை கொண்டுவரப்பட்டபோது, மத்திய அமைச்சரவையில் இருந்த பிரணாப் முகர்ஜி மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், இந்த காலக் கட்டத்தில் வங்கிகள் மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிமுறைகளை மீறி ரிசர்வ் வங்கியின் ஆலோசனையில்லாமல் ஸ்டேட் வங்கியின் தலைவராக டிஆர் வரதாச்சாரி என்பவரை நியமித்தார். இதுபெரும் சர்ச்சையாக மாறியது. அடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
அதன்பின் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அவசரநிலை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைச்கப்பட்ட ஷா கமிஷனைக் கொண்டுவந்தது. பிரணாப் முகர்ஜி, அவசரநிலை காலத்தில் விதிமுறைகளை மீறி ஸ்டேட் வங்கி தலைவராக டிஆர் வரதாச்சாரியை நியமித்தார் என்று ஷா கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஜனதா கட்சி ஆட்சி நீண்டநாள் நிலைக்காமல் கவிழ்ந்தது. அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஷா கமிஷன் அறிக்கை முடக்கப்பட்டது என்பது வேறு கதை
இந்த முறை தனது முக்கிய போர்ப்படை தளபதியான பிரணாப் முகர்ஜியை(1982-1984) மத்திய நிதியமைச்சராக இந்திரா காந்தி நியமித்தார்.
இந்திரா காந்தி இருக்கும் வரை காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அரசிலும் அதிகாரம் மிக்கத் தலைவராகவே பிரணாப் முகர்ஜி திகழ்ந்தார்.
பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக மன்மோகன் சிங் நியமித்து கையொப்பமிட்டதே பிரணாப் முகர்ஜிதான்.
ராஜீவ் காந்தியுடன் முரண்பாடு
ஆனால் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபின் அடுத்தடுத்து நடந்த அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்திராவின் நம்பிக்கையைப் பெற்ற பிரணாப் முகர்ஜிதான் அடுத்த பிரதமராக வருவார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்படஅனைவரும் எதிர்பார்த்தனர்.
ஏனென்றால் ராஜீவ் காந்திக்கு போதுமான அரசியல் அனுபவம் இல்லை என்று அப்போது ஊடகங்கள் கணித்து எழுதின. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திரா காந்தி
மறைந்தபின், ராஜீவ்காந்திக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பிரதமராகும் ஆசையால் ராஜீவ் காந்திக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும், எம்.பி.க்களோடு சேர்ந்து தனி அணி உருவாக்க முயன்றதாகவும் பிரணாப் குறித்து ராஜீவ் காந்திக்கு புகார்கள் சொல்லப்பட்டன
இதனால், கட்சியிலிருந்து சிறிது சிறிதாக பிரணாப் ஓரம்கட்டப்பட்ட பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளராகமட்டும் நியமிக்கப்பட்டு பிரதான அரசியல் நீரோட்டத்துக்குள் வராமல் பிரணாப் முகர்ஜி ஒதுக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வே அஸ்தமிக்கும் நிலை ஏற்பட்டு, மக்களின் நினைவிலிருந்து மறக்கவைக்கப்பட்டார்.
தனிக்கட்சி
இதனால் பிரணாப் முகர்ஜிக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையிலான மோதல் அதிகரித்து. ராஜீவ் காந்தியை வெளிப்படையாக விமர்சித்து பிரணாப் முகர்ஜி நாளேடுகளில் பேட்டி அளித்தார். இதைத் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரணாப் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.
1986-ம் ஆண்டில் ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் எனும் புதிய கட்சியை பிரணாப் முகர்ஜி தொடங்கினார். ஆனால் அப்போது ராஜீவ் காந்திக்கு இருந்த செல்வாக்கை எதிர்த்து பிரணாப் முகர்ஜியால் கட்சி நடத்த முடியவில்லை. அடுத்தடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரணாப் கட்சி போட்டியிட்டாலும் படுதோல்வியைத் தழுவியது.
இதை உணர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்தி, பிரணாப் முகர்ஜி இடையே சமாதானம் பேசினர். இதன் விளைவாக மீண்டும் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பிரணாப் முகர்ஜி தனது கட்சியை 1989-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி தனது கட்சியை காங்கிரஸில் இணைத்தார். இருப்பினும் காங்கிரஸில் அதிகாரமில்லாத தலைவராகவே பிரணாப் இருந்தார்.
கடந்த 1991-ம் ஆண்டில் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொல்லப்பட்டார். அதன்பின் காங்கிரஸில் நடந்த அதிரடி மாற்றங்களால் மீண்டும் பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வு துளிர்வுற்றது.
2-வது இன்னிங்ஸ்
பிரணாப் முகர்ஜியின் திறமை, அறிவுக்கூர்மை, நிர்வாக திறன் ஆகியவற்றை நன்கு அறிந்த அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ், திட்டக்குழுவின் துணைத் தலைவராக பிரணாப் முகர்ஜியை நியமித்து அரவணைத்துக் கொண்டார். இந்த பதவியால்தான் பிரணாப் முகர்ஜிக்கு அ ரசியல் வாழ்வில் 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது.
அதன்பின் 1995-96ல் முதல்முறையாக வெளியுறவுத்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜியை நியமித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். மீண்டும் பிரணாப் முகர்ஜி ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரமிக்க தலைவராக வலம் வரத் தொடங்கினார்.
அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி இடம் பெற்றபோது நாடாளுமன்றத்தில் உறுப்பினராகக் கூடஇல்லை. பிரணாப் முகர்ஜியை நாடாளுமன்ற உறுப்பினராக்க ஏதுவாக எந்த உறுப்பினரும் ராஜினாமா செய்யக் கோர முடியாத நிலை இருந்தது.
அப்போது மகாராஷ்டிராவில் மாநிலங்களவைக்கு ஒரு இடம் காலியான போது அங்கு பிரணாப் போட்டியிட முயன்றார்.ஆனால், மராட்டியத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட க்கூடாது என்று அப்போதைய முதல்வர் சரத் பவார் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்.
பின்னர் ேமற்கு வங்கத்தில் மக்களவைக்கு ஒரு இடம் காலியானதுபோது அங்கு போட்டியிடலாம் என்ற பிரணாப் எண்ணினார். ஆனால், மேற்கு வங்க அரசுக்கும், அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்படவில்லை.
இதனால், மாநிலத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படும் வரை மேற்குவங்கத்தில் தேர்தல் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று சேஷன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனால் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டிய நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜியால் அது முடியாமல் போனதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அமைச்சர் பதவி பிரணாப் முகர்ஜிக்கு கிடைக்கவில்லை.
சோனியா காந்தியின் வழிகாட்டி
இருப்பினும், சோனியா காந்தி அப்போது அரசியல் அனுபவம் பெறாத நிலையில் அவருக்கு தீவிர விசுவாசியாக இருந்து அவரின் அத்தை இந்திரா காந்தியின் வழிகளைச் சொல்லிக் கொடுத்து அரசியலை கற்றுக்கொடுத்தார் பிரணாப் முகர்ஜி.
1998-99-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டார், அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி வந்தபின் பிரணாப் முகர்ஜிக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன, சோனியா காந்தி குடும்பத்திலும், கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த மரியாதைக்குரிய தலைவராக பிரணாப் முகர்ஜி நடத்தப்பட்டார்.
2000-ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராகவும் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டு அந்தபதவியில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் இருந்தார்.2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியி்ட்டு பிரணாப் முகர்ஜி முதல்முறையாக வெற்றி பெற்றார்.
கடந்த 1969ம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே அரசியல் அதிகாரத்தில் வலம் வந்த பிரணாப் முதல்முறையாக தேர்தலில் நின்று வென்றார்.
2-வது முறையும் பறிபோனது
2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்க மறுத்துவிட்டநிலையில் பிரதமர் பதிவிக்கு தகுதியான நபர் பிரணாப் முகர்ஜிதான் என்று 2-வது முறையாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது, ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின.
ஆனால்,யாரும் எதிர்பாரா வகையில் மன்மோகன் சிங்கை பிரதமராக நியமித்து சோனியா காந்தி அறிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அதிகாரத்தில் 2-வது நபராகவே பிரணாப் முகர்ஜி வலம் வந்தார். பிரணாப் முகர்ஜியின் திறமை, புத்திக்கூர்மை ஆகியவற்றை நன்கு அறிந்த சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் அவரை கவுரவப்படுத்த தவறவில்லை. பிரணாப் முகர்ஜிக்கு பாதுகாப்புத்துறை, நிதித்துறை, வெளியுறவு, காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னவர் என கவுரமிக்க பல பதவிகளை பிரணாப் முகர்ஜிக்கு அளித்தனர்.
சமாதானத் தூதர்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக ஆகிய கட்சிகளின் இடம்பெற்றிருந்தன.
கூட்டணிக்கட்சிகளுக்கு இடையே கையாள முடியாத அளவுக்கு கடினமானவர் எனக் கருதப்படுபவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. கூட்டணிக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு மம்தா பானர்ஜி முகம் சுளிக்கும்போது, அவரைச் சமாதானம் செய்யவும், சாதுர்யமாகப் பேசவும் பிரணாப் முகர்ஜியே சோனியாவால் அனுப்பப்படுவார், அவரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
அனைவரிடமும் கடுமையாக இருக்கும் மம்தா பானர்ஜியும், பிரணாப் முகர்ஜியின் சாதுர்யமான,பக்குவமான பேச்சு, வளைந்து கொடுக்கும் குணம் ஆகியவற்றால் சாந்தமாகச் சென்றுவிடுவார்.
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு ஆகியோரிடமும் சமாதானம் பேசவும் கூட்டணிக்குள் சி்க்கல் ஏற்பட்டால் தீர்த்துவைக்கும் பொறுப்பை பிரணாப் முகர்ஜியிடமே சோனியா விட்டிருந்தார். சோனியா காந்தியின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் பிரணாபும் காரியத்ைத முடித்து வெற்றியுடன் திரும்பிய நிகழ்வுகளும் நடந்தன.
குடியரசுத் தலைவர்
கடந்த 2012-ம் ஆண்டில்தான் பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வில் அவரே எதிர்பார்த்திராத திருப்பம் நேர்ந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தியது காங்கிரஸ், அவரை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் சங்மாவைவிட இரு மடங்கு வாக்குகள் பெற்று பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார்
குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு இரு வேறு பிரதமர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் காங்கிரஸ் பின்னணியைக் கொண்ட மன்மோகன் சிங். இருவருமே காங்கிரஸ் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், மோடியும், பிரணாப்முகர்ஜியும் அரசியலில் எதிர்எதிர் துருவங்களில் பயணித்தவர்கள். பிரணாப் காங்கிரஸ் பின்னணி, மோடியின் பூர்வீகம் ஆர்எஸ்எஸ்.
இருப்பினும், பிரதமர் மோடிக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் எந்தவிதமான உரசல் இல்லாமலே உறவு சென்றது. ஆலோசனை செல்ல வேண்டிய இடத்தையும். ஆலோசனையயும், அறிவுரை கூற வேண்டிய இடத்தையும் பிரணாப் முகர்ஜி சரியாகப் பயன்படுத்தினார். உதாரணமாக நிலம் கையகப்படுத்தும் மசோதா கையொப்பத்துக்கு வரும்போது பிரணாப் முகர்ஜி சற்று அதிருப்தி தெரிவித்ததால், அதைப் புரிந்து கொண்டு மோடி அரசு பின்வாங்கியது.
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி 5 ஆண்டுகளை எவ்விதமான சலசலப்பும் இன்றி நிறைவு செய்து, அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி
இந்தசூழலிலில்தான் கடந்த 2018-ம் ஆண்டு ஆர்எஎஸ்எஸ் சார்பில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால், பிரணாப் முகர்ஜி இந்த அழைப்பை நிராகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்தபோதிலும் அவர் அதைபுறந்தள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற பெயரையும் பிரணாப் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனர் கேசவ் பலேராம் ஹெட்கேவர் இல்லத்துக்கு சென்றார். இந்தியத் தாயின் தலைசிறந்த மகன் ஹெட்கேவர் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பிரணாப் முகர்ஜி குறிப்பு எழுதினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி மையப்புள்ளியாக மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்குச் சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று சி்த்தாந்த ரீதியாக தனது கருத்துக்களை தெரிவித்தார். பிரணாப் முகர்ஜியின் இந்த பேச்சை ஆர்எஸ்எஸ் இயக்கம் முழுமனதாகப் பாராட்டியது.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டது. மூளை அறுவை சிகிச்சை மற்றும் கரோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனிக்காமல் இன்று உயிரிழந்தார்.
12-க்கும்மேற்பட்ட நூல்கள்
பிரணாப் முகர்ஜி இதுவரை 12-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கடந்த 1984-ம் ஆண்டு ஈரோமணி சர்வே மாத ஏடு நடத்திய சர்வேயில் சிறந்த நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.
2010-ம் ஆண்டு ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியை, உலகவங்கி,ஐஎம்எப் ஆதாரங்களுடன் எமர்ஜின் மார்க்கெட் நாளேடு தேர்வு செய்தது. தி பேங்கர் மூலம் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராகவும் பிரணாப் தேர்வு செய்யப்பட்டார்.
பாரத ரத்னா விருது
2008-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷன் விருதும், 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி பிரணாப் முகர்ஜியை கவுரப்படுத்தியது.
இதுதவிர சர்வதேச அளவில் 14 பல்கலைக்கழகங்கள் மூலம் கவுரவ டாக்டர் பட்டமும், வங்கதேசம், ஐவரிகோஸ்ட், சைப்ரஸ் நாடுகள் மூலம் கவுரவ விருதுகளும் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago