ஜிஎஸ்டி பற்றாக்குறைக்கு மாநிலங்களைக் கடன்வாங்கச் சொல்வது நியாயமற்ற சிந்தனை: மத்திய அரசு மீது தேவகவுடா விமர்சனம்

By பிடிஐ


ஜிஎஸ்டி வரிவருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பது நியாயமற்ற சிந்தனை. மத்திய அரசு தனது பொறுப்பைச் சுருக்கிக்கொள்ள முடியாது என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா விமர்சித்துள்ளார்.

41-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி தற்போது இழப்பீடு தர முடியாது, ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுங்கள் என மாநில அரசுகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அனைத்து மாநிலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே இருக்கும் உறவு ஏற்கெனவே சிக்கலாக இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்குப் பின் இன்னும் மோசமடைந்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி வருவாயில் ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை இருப்பதால் இழப்பீடு வழங்க இயலாது. ஆதலால், மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த ஆலோசனை சரியானது அல்ல.

ஏற்கெனவே மாநிலங்கள் பெரும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் திணறி வருகின்றன. இந்தச் சூழலில் மாநில அரசுகளை ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறக்கூறுவது நியாயமற்ற சிந்தனை. ஏனென்றால், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள் தங்கள் வரிவிதிக்கும் உரிமையை கைவிட்டுவிட்டு, ஜிஎஸ்டி வரி முறைக்கு வந்துவிட்டன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வரி வருவாயில் ஏற்படும் இழப்புகளுக்குப் போதுமான இழப்பீடு தரப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தால்தான் ஜிஎஸ்டி வரி முறைக்கு மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. மாநிலங்களுக்குத் தேவையான கடன் வழங்குவதற்கும், இழப்பை ஈடு செய்யவும் மத்திய அரசுக்குத்தான் பொறுப்பு இருக்கிறது. பொறுப்பைச் சுருக்கிக்கொள்ள முடியாது.

ஜிஎஸ்டி தவிர, 15-வது நிதிக் குழுவின் கீழ் வரிவிகிதப் பகிர்வுக்கான புதிய விதிகளும் சில குழப்பங்களை உருவாக்கியுள்ளது. பல வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மத்திய அரசின் வரித் தொகுப்புக்கு அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும், ஆனால், தங்களுக்கு அதற்கு ஈடாக மிகக் குறைவாகவே பலன் கிடைப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றன.

‘கூட்டுறவு கூட்டாட்சி’ பற்றி அடிக்கடி பேசும் மத்திய அரசு, மாநிலங்களை ஆக்கபூர்வமாக, உற்சாகமாக அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும். சிக்கலான, கடினமான விஷயங்களிலும் ஒருமித்த கருத்தை மாநில அரசுகளுடன் சேர்ந்து எட்ட வேண்டும்.

மாநில அரசுகளும், மத்திய அ ரசும் அடிக்கடி மோதல் போக்கோடு நடந்து கொள்வது தேசத்தின் நன்மைக்கு உகந்தது அல்ல''.

இவ்வாறு தேவகவுடா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்