காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவிய இளம்பெண் ஸ்மார்ட்போன் படங்களால் சிக்கினார்

By செய்திப்பிரிவு

புல்வாமா தாக்குதல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இன்ஷா ஜன் என்ற 23 வயது பெண்ணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை இவர் செய்து கொடுத்துள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதி அடில் அகமது தர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஜம்முவில் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ கடந்த 25-ம் தேதி 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட 19 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் என்கவுன்ட்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மசூத் அசார் உட்பட 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

மசூத் அசாரின் உறவினரும் புல்வாமா தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியுமான முகமது உமர் பாரூக் (24) கடந்த மார்ச் மாதம் காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரது அதிநவீன ஸ்மார்ட்போன் கைப்பற்றப்பட்டது. அந்த ஸ்மார்ட்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள், சமூக வலைதள தகவல் பரிமாற்றங்கள் மீட்டு எடுக்கப்பட்டன. அதன்மூலம் வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.

மீட்டு எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது உமர் பாரூக்கும் புல்வாமாவின் ஹக்ரிபோரா பகுதியை சேர்ந்த 23 வயது இன்ஷா ஜன் என்ற பெண்ணும் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இன்ஷாவும் அவரது தந்தை தாரிக் அகமது ஷாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கடந்த 2018 ஏப்ரல் 14-ம் தேதி முகமது உமர் பாரூக் உட்பட 4 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவி
யுள்ளனர். கடந்த 2018 முதல் 2019 வரையிலான காலத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட முறை முகமது உமர் பாரூக், சமீர் தர் மற்றும் புல்வாமா கார் குண்டு தாக்குதலை நடத்திய அடில் அகமது தர் ஆகியோர் இன்ஷாவின் வீட்டில் தங்கியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் 4 முதல் 5 நாட்கள் வரை தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் இன்ஷா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். முகமது உமர் பாரூக்கும், இன்ஷாவும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இது இன்ஷாவின் தந்தை தாரிக் அகமது ஷாவுக்கும் தெரிந்துள்ளது. முகமது உமர் பாரூக் சுட்டுக் கொல்லப்படும் வரை அவருடன் இன்ஷா செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார்.

கார் குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதி அடில் அகமது தரின் கடைசி வீடியோ இன்ஷாவின் வீட்டிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அடில் அகமது தருக்கு உணர்ச்சிபூர்வமாக பேசத் தெரியாது என்பதால் அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் தீவிரவாதி சமீர் தர் குரல் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ, ஆடியோ பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அங்கு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு அடில் அகமது தரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை நடத்த ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பு சுமார் ரூ.5.7 லட்சத்தை செலவு செய்துள்ளது. இவை உட்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்