கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவும், மரண விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகக் கட்டுப்படுத்தவும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவைச் செயலர் காணொலி மூலம் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, குஜராத், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடந்தது. மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், ஐ.சி.எம்.ஆர். டைரக்டர் ஜெனரல், நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட் நோய்க் கட்டுப்பாட்டு உத்திகள் மற்றும் மேலாண்மை குறித்து இந்த காணொளிக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கோவிட் பாதிப்பின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் விரிவான அறிக்கை சமர்ப்பித்தார். அதிகமான மரணங்கள் நிகழும் மாவட்டங்கள் பற்றி அதில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
மருத்துவப் பரிசோதனை செய்தல், தொடர்புகள் தடமறிதல், கண்காணிப்பு, நோய் பாதித்தப் பகுதிகளைக் கட்டுப்படுத்துதல், வீடுகளில் தனிமைப்படுத்துதல், ஆம்புலன்ஸ் வசதிகள், மருத்துவமனைப் படுக்கைகள், ஆக்சிஜன் கிடைக்கச் செய்தல், சிகிச்சை நடைமுறை பற்றிய தகவல்களும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
கடந்த 2 வாரங்களில் நாட்டில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 89 சதவீத மரணங்கள் இந்த 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடந்துள்ளன. எனவே நோய்த் தொற்றுப் பரவுதலைக் கட்டுப்படுத்தவும், மரணங்களைக் குறைக்கவும் தீவிரக் கண்காணிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
பின்வரும் வழிமுறைகளைக் கடைபிடித்து கோவிட் பாதிப்பால் நிகழும் மரணங்களை ஒரு சதவீதத்துக்கும் கீழாகக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு அறிவுறுத்தப்பட்டது:
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்வது, தடமறிதல் மற்றும் கண்காணிப்பைத் திறம்பட அமல் செய்வது
புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்படுபவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் 72 மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பத்து லட்சம் பேரில் குறைந்தபட்சம் 140 பேருக்கு பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டதால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் / சிகிச்சை மையங்களில் ஆன்டிஜென் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிகுறி தென்படாதவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் மறுபரிசோதனை செய்யலாம்.
வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளை அவ்வப்போது மேற்பார்வை செய்ய வேண்டும் (தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம், நேரில் சென்று பார்க்கலாம்). SPO2 அளவு குறிப்பிட்ட அளவை விடக் குறைவாக இருந்தால், உரிய நேரத்துக்குள் சிகிச்சை மையத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
கோவிட் சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் பற்றி மக்கள் அறியும் வகையில் பொதுவெளியில் தகவல்களை வெளியிட வேண்டும். கோரிக்கை வந்த பிறகு ஆம்புலன்ஸ் சென்று சேருவதற்கான கால இடைவெளியைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்.
அனைத்து நேர்வுகளிலும் செம்மையான மருத்துவ மேலாண்மை மூலமாக உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவ மையத்திலும் வாரந்தோறும் மரண விகிதங்களை கவனிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ள நோயாளிகள் (வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்கள், 60 வயதுக்கும் அதிகமானவர்கள்) குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்தப் பகுதியின் தேவைக்கு ஏற்ப கோவிட் பிரத்யேக சிகிச்சை மைய வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அனைத்து மையங்களிலும் தேவையான மருந்துகள், முகக்கவச உறைகள், முழு உடல்கவச உடைகள் கிடைப்பதை மேற்பார்வை செய்திட வேண்டும்.
நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல், முகக்கவச உறை அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, இருமலின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற தகவல்களைப் பரப்பிட வேண்டும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தற்போதுள்ள நிலவரம் குறித்தும், கோவிட்-19 பரவாமல் தடுக்க தாங்கள் ஆயத்தமாக இருப்பது குறித்தும் தலைமைச் செயலாளர்கள் தகவல்களைத் தெரிவித்தனர். சவால்களைச் சமாளிக்க சுகாதார கட்டமைப்பு வசதிகள் இருப்பது குறித்தும், அவற்றை மேலும் பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் விளக்கினர்.
மரண விகிதத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், கோவிட் பாதுகாப்புப் பழக்கவழக்கங்களைப் பரப்புவதில் சமுதாயப் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago